சேலம்: துர்கா பூஜை, தீபாவளி, சாத் திருவிழா, அடுத்தடுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இைதயொட்டி அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் 6,556 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே பண்டிகைகளுக்காக 4,429 சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கியது. தற்போது அதிலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த துர்காபூஜை, தீபாவளி, சாத் பண்டிகைக்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மிக அதிகபடியான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களில் சூரிய பகவானை வழிபடும் சாத் திருவிழாவை கொண்டாட புறப்படுகின்றனர். இதனால், தென் மாநிலங்களில் இருந்தும், டெல்லி, அரியானா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்குவங்க மாநிலங்களில் இருந்தும் அதிக சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. தெற்கு ரயில்வேயை பொறுத்தளவில், சென்னை, மதுரை, திருநெல்வேலி, நார்கோவில், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறைக்கு மக்கள், நெருக்கடி இன்றி பயணிக்க வசதியாக இம்மார்க்கங்களில் இதுவரை 44 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள், 394 முறை இயக்கப்படுகிறது. இதுவே கடந்த ஆண்டில் 21 சிறப்பு ரயில்கள், 78 முறை மட்டும் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டி வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பண்டிகை காலங்களில் மக்கள் தவிப்புக்கு தீர்வு காணும் நிறைய சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த அளவிலே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டுவதுபோல், சிறப்பு ரயில்கள் இயக்கத்திலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி உள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
The post பண்டிகை கால சிறப்பு ரயில் தமிழகத்துக்கு வெறும் 44 தான்: தெற்கு ரயில்வே மீது மக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.