×

தாம்பரத்தில் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது

தாம்பரம், அக்.11: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை இயக்குனருமான ராகுல்நாத் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் முன்னிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரேடியல் சாலையில், நெடுஞ்சாலை துறை சார்பில் ₹110 கோடி மதிப்பீட்டில் 5.25 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் பிரதான மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டி தொட்டிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வண்டல் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, கடந்த மழையின்போது வெள்ளம் சூழ்ந்த தாழ்வான பகுதிகளில் இந்தாண்டு மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அந்தப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு குதிரை திறன் கொண்ட கூடுதல் மோட்டார் பம்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைப்பதற்கு தயார் நிலையில் உள்ள 19 நிவாரண மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கு உணவளிக்கும் வகையில் மண்டல அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சமையலறைகள் குறித்தும், நிவாரண பொருட்கள், பொதுமக்களுக்கு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது குறித்தும், மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வண்டல்கள் அகற்றும் பணி, தாம்பரம் மாநகராட்சியின் 2 சுரங்கப்பாதைகளில் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்களிடமிருந்து மழைத் தொடர்பாக வரும் புகார்களை பெற்று, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, மழைக்காலங்களில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியின் பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார், மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள், நீர்வளத்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர்கள், மின்சார வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரத்தில் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tambaram ,TAMBARAM, ,CHENGALPATTU ,Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – கடற்கரை நோக்கி வந்த...