சென்னை: இணையவழி குற்றப்பிரிவின் பயன்பாடு மற்றும் சாதனைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.”சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கணினிவழி குற்றங்கள் (சைபர் கிரைம்) ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான துஹாக்கிங் அதாவது அதிநவீன தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்கள், இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள் டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன.
சமூகத்தில் நடக்கும் மற்ற குற்றங்களில் இருந்து சைபர் கிரைம் வேறுபட்டது. காரணம், அதற்கு புவியியல் எல்லைகள் மற்றும் சம்பவ இடம் என்று இல்லை மற்றும் சைபர் குற்றவாளிகள் யார் என்பது தெரிவதில்லை. இது அரசு, வணிகம் முதல் குடிமக்கள் வரை அனைத்து தரப்பினர்களையும் பாதிக்கிறது.
வளர்ச்சி என்பது எப்பொழுதும் வளர்ச்சியாக மட்டும் இராது. அதனுடன் சேர்ந்து ஒரு சில தீங்கும் ஏற்படலாம். நிதி மோசடியின் சிக்கல்களைத் தீர்க்க, சட்ட அமலாக்க முகமைகள் (LEAs), வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி இடைத்தரகர்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை நிறுவுவது அவசியம்.
இந்த ஒருங்கிணைப்பு, சந்தேகத்திற்கு இடமில்லாத குடிமக்களிடமிருந்து மோசடி செய்பவர்கள் நிதியை திசை திருப்புவதைத் தடுக்க விரைவான தீர்க்கமான மற்றும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட CFCFRMS டிஜிட்டல் வங்கி, credit/debit card பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது. மற்ற அவசரகால எண் 108, 112 போன்று சைபர் ஹெல்ப்லைன் எண் 1930யின் பயன்பாடும் மக்களை வேகமாக சென்றடைந்து வருகிறது. CFCFRMS இல் தெரிவிக்கப்படும் புகார்களில் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் தாமதமின்றி முடக்கப்படுகின்றன.
இந்த வசதி பாதிக்கப்பட்டவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றுகிறது. இந்த வசதி புதிய அல்லது நேரடி புகார்களுக்கு மிகவும் பொருத்தமானது. அதேசமயம் இது பழைய புகார்களைத் தடுக்காது. இணைய புகார்களை பதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. எந்த நேரமும் தாமதமும் இன்றி புகார்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் சைபர் நிதி மோசடிகளால் ரூ.1116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு அதிரடி நடவடிக்கை மூலம் ரூ.526 கோடிகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். உடனடியாக புகாரளிப்பது. எனவே பொதுமக்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் இணையவழி தாக்குதலை சந்தித்தாலோ புகார்களை உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திலிருந்து பேசுவதாக கூறி அழைத்து.நீங்கள் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சிபிஐ அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறி ஒரு எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். சிபிஐ அதிகாரியாக பேசிய நபர் பாதிக்கப்பட்ட நபரிடம் அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க நாங்கள் சொல்லும் வங்கிகணக்குகளுக்குப் பணத்தை அனுப்பி வைக்கவேண்டும். தவறினால் நீங்கள் சட்ட சிக்கலை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதால் பாதிக்கப்பட்டவர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். இந்த வழக்கில், கணினிசார் குற்றப் பிரிவு தலைமையிடம் துரித நடவடிக்கை எடுத்து ரூ.170,57,000/-மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான ஆலோசனை.
1 ஆன்லைனில் யாரையும் கைது செய்யமுடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட்டதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம்.
2 உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால்
பரிந்துரைக்கப்பட்டாலும்,
Telegram அல்லது Whatsapp இல் உள்ள தெரியாத குழுக்களில் சேர வேண்டாம்.
3. இணைய உலகில் யாரையும் நம்ப வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள்.
4. அனுப்புநரின் முகவரியைக் கவனமாகச் சரிபார்க்கவும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் போலி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குகிறார்கள், அவை முறையான மின்னஞ்சல் முகவரிகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இணையவழி குற்றப்பிரிவின் பயன்பாடு மற்றும் சாதனைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை அறிக்கை appeared first on Dinakaran.