×

மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சுந்தர் (வயது 21). தாயார் அமரா. 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். சுந்தர் ஏற்கனவே டிப்ளமோ முடித்து விட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, சென்னை மாநில கல்லுரியில் முதலாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிப்பில் சேர்ந்தார். தினமும் திருத்தணியில் இருந்து புறநகர் மின்சார ரயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே கடந்த 4ம் தேதி சுந்தர் கல்லூரியை முடித்துவிட்டு தனது நண்பர்கள் சூர்யா, தாவூத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டுக்கு செல்வதற்காக சென்டிரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சுந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுமார் 15 பேர் வந்தவுடன், சூர்யா, தாவூத், சுந்தர் ஆகியோர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். அருகே ஓடும்போது, சுந்தர் தடுமாறி கீழே விழுந்தார். உடனே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுந்தரை கொடூரமாக தாக்கினர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுந்தரை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஈஸ்வர் (20), ஹரி பிரசாத் (20), கமலேஸ்வரன் (20), சந்துரு (20), யுவராஜ் (20) ஆகிய 5 பேரை கைது செய்து கோர்ட் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இவர்கள் 5 பேரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதனையடுத்து உதவி கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில், பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் கொலை வழக்குப்பதிவு செய்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் சென்டரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் சமர்ப்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Pachaiapan College ,Chennai ,Bachaiappan College ,Sundar ,Chanduru ,Yuvraj ,Iswar ,Hari Prasad ,Kamaleswaran ,Thiruvallur District ,Thiruthani ,Bachaiapan College ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!