×

இந்தியாவால் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும்: இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் சொல்கிறார்

டெல் அவிவ்: இந்தியாவால் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காசா மீது வான்வழியாகவும் தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவுக்கு ஆதரவாக ஏமன் கிளர்ச்சி படையான ஹவுத்தி, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் ஈரான் ராணுவம், கடந்த வாரம் இஸ்ரேல் மீது 181 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உள்பட பலரும் கொல்லப்பட்டனர். இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் காண்ட்லர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில், இந்திய அரசுடன் எங்களுக்கு நல்ல நட்புறவு உள்ளது. அரசு மட்டத்தில் மட்டுமல்லாமல் இருநாட்டு மக்கள் மத்தியிலும் சுமுகமான உறவு உள்ளது. இஸ்ரேலின் முக்கியமான நட்பு நாடாக இந்தியா உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செயல்படக்கூடிய நியாயத்தின் குரலாக இந்தியாவை பார்க்கிறோம். இந்த பிராந்தியத்தில் சமரசம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என ஈரானுக்கு சொல்லி கொடுக்கிறார்கள். இதற்கு பதில், அமைதியை கடைபிடிக்குமாறு ஈரானுக்கு அவர்கள் முதலில் ஆலோசனை கூற வேண்டும் என நினைக்கிறேன். எங்கள் நாட்டின் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது. லெபனான், காசா மட்டுமல்லாது ஈரானும் ஏமனும் எங்கள் நாட்டின் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியது. இன்னும் சொல்லப்போனால் 7 முனை தாக்குதலை எதிர்கொண்டோம். ஆனாலும் எங்கள் கை ஓங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் மிகவும் வலிமையானது. எங்களை நோக்கி வரும் எத்தகைய தாக்குதலையும் தடுத்து நிறுத்தும் திறன் எங்களுக்கு உள்ளது’ என்றார்.

ஹமாஸ் தாக்குதலின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் கூறும்போது, ‘இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஓராண்டுக்கு முன்பு ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் எங்கள் நாட்டை சேர்ந்த பலரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். எங்கள் எதிரியை தோற்கடிப்போம். எங்கள் நாட்டு பணய கைதிகள் அனைவரையும் மீட்டு வருவோம். தவறுகளில் இருந்து பாடம் கற்று வருகிறோம். சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பதில் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்’ என்றார்.

The post இந்தியாவால் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும்: இஸ்ரேல் செய்தி தொடர்பாளர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : India ,Middle East ,Israel ,Tel Aviv ,Hamas ,Gaza, ,Palestine ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு...