×

திருப்பதியில் பிரமோற்சவ விழா கோலாகலம் தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி: லட்சக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருமலை: ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழாவில் தங்க தேரில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து 3 லட்சம் பக்தர்கள் மாட வீதியில் திரண்டு வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை மனமுருகி தரிசனம் செய்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. பிரமோற்சவத்தின் 6வது நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

வாகன சேவையின் முன் காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்கள் செல்ல ஜீயர் சுவாமிகள் குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடியபடி சென்றனர். இவர்களுக்கு பின்னால் பல மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் கண்கவர் நடனமாடியபடி சென்றனர். அனுமன் வாகன சேவை நடந்து முடிந்த பின்னர் மாலையில் தங்க தேரோட்டம் தொடங்கியது. இதில் 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மகா லட்சுமியின் சொரூபமாக பெண்கள் விளங்குவதாலும், தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரியதானது என்பதாலும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது நான்கு மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, ேகாவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர். தங்க ேதரோட்டம் நடந்து முடிந்த பின்னர் நேற்றிரவு தங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்.

இரவு 7 மணி முதல் 9 மணிவரை நான்கு மாட வீதிகளில் கஜ வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமியை காண ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post திருப்பதியில் பிரமோற்சவ விழா கோலாகலம் தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி: லட்சக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Promotsava festival ,Tirupati ,Malayappa ,Swami ,Kolagalam ,Thirumalai ,Eyumalayan Temple ,Tirupati Seven ,Malayan ,Temple ,Malayappa Swami ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி...