மேலும், கலியுகத்தில் தாயை கவனித்துக் கொள்ளாமல் கைவிடுபவர்கள், அவர்களை தூஷிப்பவர்கள், பொதுவாகப் பெண்களை நிந்திப்பவர்கள் ஆகியோர் ஏராளமாக இருப்பார்கள். அவர்களின் பாவத்திற்கு இங்குள்ள குளத்தில் நீராடி தங்களைத் தரிசித்து சரணடைவதால், பிராயச்சித்தம் ஏற்படும் என்று ஆஞ்சநேயர் பெருமாளிடம் வரம் கேட்டுப் பெற்றதாக வரலாறு. (இது தெரியாமல் செய்த பாவத்திற்கு பொருந்தும்.
தெரிந்தே செய்த பாவத்திற்கு பொருந்தாது) மகாபாரதத்தில், கர்ணனே தன் மூத்த மகன் என்பதை குந்திதேவி சொல்லாமல் மறைத்து விட்டதால் தர்மபுத்திரர் கோபமுற்று, பெண்களிடன் இனி எந்த ரகசியங்களும் தங்காமல் இருக்கட்டும் என்று சாபமிட்டார். பெண்களை சபித்ததால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. அத்தோஷம் விலக, தர்மபுத்திரர் தம் தாய் குந்திதேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இங்குள்ள குளத்தில் நீராடி பெருமாளை தரிசித்தவுடன் அவரின் தோஷங்கள் நீங்கியதாக வரலாறு. மூலவரின் திருநாமம், ஆதிகேசவப் பெருமாள், தாயார் பெயர், மரகதவல்லித் தாயார்.
எப்படி செல்வது?: கூவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர். கூவத்தூர் ECR சாலையில் உள்ளது, கல்பாக்கத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கல்பட்டு.
1009 ஆண்டில், இங்கு வசித்த வீரராகவர் – கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிகள் ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார்.
தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. இவரை மனதில் நினைத்தாலே போதும் அருள்கிறார். மூலவரின் திருநாமம், வரதராஜப் பெருமாள், தாயார் பெயர், புஷ்பவல்லி.
எப்படி செல்வது?: பூந்தமல்லி பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில், மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிறகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர்.
அப்போது சுவாமி ‘‘போக சயனத்தில்’’ ரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிறகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. மூலவரின் திருநாமம், நீர்வண்ணர் பெருமாள், தாயார் பெயர், அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி.
எப்படி செல்வது?: சென்னை, குரோம்பேட்டை அல்லது பல்லாவரம் மின் தொடர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநீர்மலை. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதி உண்டு. சொந்த, தனி வாகனங்களிலும் செல்லலாம்.
ஜி.ராகவேந்திரன்
The post தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார் appeared first on Dinakaran.