×

பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஜெருசலேம்: பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து 8ம் தேதி காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்தாலும் போர் இன்னமும் நீடிக்கிறது. இந்த போரில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. ஹமாஸ் படையினருக்கு ஏமனில் செயல்படும் ஹவுதி படையினரும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா படையினரும் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளனர்.

அதன்ஒரு பகுதியாக ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹிஸ்புல்லா படையினரை குறி வைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனான் மீது முதலில் வான் வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் தற்போது தரை வழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உள்பட பல முக்கிய போராளிகள் பலியாகி விட்டனர். இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான சுஹைல் ஹூசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

* இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இதனிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நேற்று ராக்கெட்டுகளை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது. இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயல் தலைவர் ஷேக் நைம் காசெம் கூறியதாவது, “இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்துவதால் இன்னும் ஏராளமான இஸ்ரேலியர்கள் இடம்பெயர்வார்கள். ஹிஸ்புல்லாவின் திறன்கள் இன்னும் அப்படியே உள்ளன” என்று கூறினார்.

The post பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Jerusalem ,Hezbollah ,Beirut ,Hamas ,Gaza ,Dinakaran ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...