×

நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் பலி: 14 பேர் காயம்

திருப்பூர்: திருப்பூர் அருகே வீட்டில் தயாரித்து வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்து 9 மாத குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். 14 பேர் காயம் அடைந்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன்நகர் பொன்னம்மாள் வீதியை சேர்ந்தவர் கார்த்தி. இவரது உறவினர் ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த சரவணக்குமார். இவர் நம்பியூரில் பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். தீபாவளி மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்காக சரவணக்குமாருக்கு அதிகளவு ஆர்டர்கள் வந்ததாக தெரிகிறது. எனவே பட்டாசுகள், நாட்டு வெடிகள் தயாரிப்பு கார்த்தியின் வீட்டில் நடந்து வந்துள்ளது. சுள்ளான் என்ற குமார் (23) கடந்த ஒரு வாரமாக இங்கு இருந்து பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை தயாரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் திடீரென பலத்த வெடிசத்தத்துடன் கார்த்தியின் வீடு இடிந்து விழுந்தது. அந்த பகுதி முழுவதும் பலத்த அதிர்வுக்குள்ளானது. இதில் பலரின் வீடுகள் இடிந்து விழுந்தன. தகவலறிந்து திருமுருகன்பூண்டி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அப்போது இடிபாடுகளுக்குள் இருந்து சுள்ளான், கார்த்தியின் பக்கத்து வீட்டில் இருந்த முகமது உசேன் என்பவரது 9 மாத குழந்தையான ஆலியாஸ்ரின், உடல் சிதறிய நிலையில் ஒரு பெண் என 3 பேர் பலியாகி கிடந்தனர். பக்கத்து வீடுகளில் தங்கியிருந்த வடமாநில ஆண்கள், பெண்கள் என 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார்த்தி வீட்டில் இருந்து வெடிக்காத 50 கிலோ வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post நாட்டு வெடிகள் வெடித்து 3 பேர் பலி: 14 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Karthi ,Ponnammal Road, Pandyannagar ,Tirupur Corporation ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!