×

நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகல்

விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2016 இல் முதன்முதலாக ஒரத்தூர் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டு 2018 விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆகவும் 2019ல் விக்கிரவாண்டி தொகுதி செயலாளர் 2021 விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ஆகவும் 2024 விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 உள்ளாட்சி தேர்தலில் நானும் என் மனைவியும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம். இதல் உள்ளாட்சி தேர்தலைத் தவிர்த்து வேறு எந்த வேட்பாளருமே எங்கள் மாவட்டமோ எங்கள் தொகுதியோ சார்ந்தவர் கிடையாது. அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட நான்கு மாவட்ட கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் 75% வேட்பாளரை நிரப்பினோம், கட்சியின் அனைத்து ஒன்றிய பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி அண்ணனிடம் கையொப்பமும் வாங்கினோம், மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

இது நாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும் படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம். அண்ணன் கூறியது: இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்,

பலமுறை பேசியும் நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில் மேலும் 2026 தேர்தலுக்கு இப்பொழுதே முகம் தெரியாத வேட்பாளரை அறிவிக்க வேண்டியதேவை என்ன? அண்ணா நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ பொருளோ அல்ல எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம் இதுவே உங்களால் தர முடியவில்லை.
எனவே மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகல் appeared first on Dinakaran.

Tags : Virtupuram West District ,Bhubalan ,party ,Viluppuram ,Tamil Party ,Viluppuram West District ,Viilapuram West ,District Secretary ,Dinakaran ,
× RELATED சமையல் அறை மேற்கூரை விழுந்து மாமனார்,...