×

இலங்கை சிறையில் மொட்டையடித்து சித்ரவதை மீனவர்களை விடுதலை செய்ய கோரி பெண் தீக்குளிக்க முயற்சி: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தர்ணா

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருக்கும் பாம்பன் மீனவர்களை விடுதலை செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பாம்பன் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், மீனவர்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது மீனவ பெண் ஒருவர், உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தடுத்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்து சென்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘‘கடந்த ஆக.8ம் தேதி கடலுக்கு சென்ற பாம்பன் பகுதியை சேர்ந்த 35 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 4 நாட்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் – மதுரை சாலையில் மறியலில் ஈடுபடும்போது அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கை தேர்தல் முடிந்ததும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், 60 நாட்களுக்கு மேலாகியும் மீட்கவில்லை. மேலும் தற்போது இலங்கை புத்தளம் சிறையில் இருக்கும் மீனவர்கள் அனைவரும் மொட்டையடிக்கப்பட்டு, உணவு வழங்கப்படாமல் சித்ரவதை செய்வதாக போனில் தகவல் வருகிறது. அதில் 2 பேருக்கு பெரியம்மை நோய் தொற்றும் வந்துள்ளதாக கூறுகின்றனர். எனவே 35 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் உடனடியாக மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post இலங்கை சிறையில் மொட்டையடித்து சித்ரவதை மீனவர்களை விடுதலை செய்ய கோரி பெண் தீக்குளிக்க முயற்சி: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தர்ணா appeared first on Dinakaran.

Tags : Lankan ,Dharna ,Ramanathapuram ,collector's ,Union government ,People's Grievance Day ,Collector ,Pamban ,union ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி...