×

அரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும்

புதுடெல்லி: அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது காலை 10 மணிக்கு தெரியவரும். ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தலும் இதுவே. இதனால், இதுவரையிலும் ஆளுநரின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் வர உள்ளது.

இதன்காரணமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தும், பாஜ, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) உள்ளிட்டவை தனித்தும் போட்டியிட்டுள்ளன. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் மொத்தம் 850 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா (பத்காம் மற்றும் கந்தர்பால் தொகுதிகள்), பிடிபி கட்சியின் சஜத் கனி லோன் (ஹந்த்வாரா, குப்வாரா தொகுதிகள்), காங்கிரஸ் மாநில தலைவர் ரவீந்திர ரெய்னா (நவ்ஷேரா) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ஆட்சியை கைப்பற்ற குறைந்தபட்சம் 48 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றே கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ல் பாஜ 25 தொகுதிகளில் வென்றது. 28 தொகுதிகளை வென்ற பிடிபி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

ஆனால் அந்த கூட்டணி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யாமல் பாதியிலேயே முறிந்தது. கடந்த முறையை காட்டிலும் பாஜ இம்முறை சற்று கூடுதல் தொகுதிகள் பெறும் என்றும் பிடிபி 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன. தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளதால் கூட்டணி ஆட்சிக்கே அதிக வாய்ப்புள்ளது. இதே போல அரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கட்சி, சுயேச்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக நயாப் சிங் சைனியை முதல்வராக பாஜ நியமித்ததைத் தொடர்ந்து, ஜேஜேபி உடனான கூட்டணி முறிந்தது. பாஜ தனித்து போட்டியிட்டது. இதே போல, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி அசாத் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளன. இந்திய லோக் தளம், பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து களமிறங்கின.

பல கட்சிகள் இருந்தாலும், அரியானாவில், பாஜ, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் முதல்வர் நயாப் சிங் சைனி (லாட்வா), எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா (கர்ஹி சம்பலா-கிலோய்), இந்திய தேசிய லோக் தளத்தின் அபய் சிங் சவுதாலா (எல்லனாபாத்), ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் சவுதாலா (உச்சனாகாலன்), பாஜவின் அனில் விஜ் (அம்பாலா கன்டோன்மென்ட்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியே அரியானாவில் வெற்றி பெறும் என கணித்துள்ளன. கடந்த 10 ஆண்டாக ஆட்சி செய்யும் பாஜ மீது அரியானா விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பாஜ இம்முறை தோல்வி அடைந்து காங்கிரஸ் மீண்டும் அரியானாவில் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலத்திலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை 10 மணிக்கு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்கிற முடிவுகள் தெரியவரும்.

* 50 தொகுதிகளுடன் பாஜ ஆட்சி அமையும்
ஜம்மு காஷ்மீர் மாநில பாஜ தலைவர் ரவீந்திர ரெய்னா நேற்று அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் பாஜ 35 இடங்களில் வெற்றி பெறும். சுயேச்சைகள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். இதன் மூலம், எங்கள் கூட்டணி 50க்கும் அதிகமாக பெரும்பான்மை இலக்கை தாண்டி ஆட்சி அமைக்கும். இத்தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்திக்கும்’’ என்றார்.

* அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சி அமையும்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அளித்த பேட்டியில், ‘‘வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக எங்களால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். காஷ்மீர், அரியானா இரண்டிலும் காங்கிரஸ் அமைக்கப் போகிறது. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம். அரியானாவில் தனித்து ஆட்சியை பிடிப்போம்’’ என்றார்.

* பிடிபி ஆதரவை பெற ஆட்சேபனை இல்லை
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தேவைப்பட்டால் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியின் ஆதரவை பெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்கு எங்கள் கட்சி தயாராக இருக்கிறது’’ என்றார்.

The post அரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Tags : Aryana ,Jammu and Kashmir ,New Delhi ,Legislative Assembly ,Jammu and ,Kashmir ,Ariana ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...