×

பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி: பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்

டெய்ர் அல் பலாஹ்: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசாவில் மசூதி மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. இதில் 26 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர். லெபனானிலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளதால் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1200 பேர் பலியானார்கள்.

250 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து வைத்தனர். இதில், 100க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.  இதையடுத்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் படைகள் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்தது. இஸ்ரேலின் ராணுவம், போர் விமானங்கள் பாலஸ்தீனத்தில் உள்ள காசா உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ச்சியாக குண்டுமழை பொழிந்ததில் 42,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பாதிபேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

இன்றோடு ஓராண்டு நிறைவு: இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மத்திய கிழக்குப் போருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் 40,000 பேர் அணிவகுத்துச் சென்றனர். பாரிஸ், ரோம், மணிலா, கேப் டவுன் மற்றும் நியூயார்க் நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அமெரிக்கா, அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதை எதிர்த்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில்,காசாவில் உள்ள மசூதி, ஒரு பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. இதில்,26 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவில் வான் மற்றும் தரைவழி தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, கடந்த மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிலைகள், அலுவலகங்களை குறி வைத்து இஸ்ரேல் விமான படை குண்டுகளை வீசி வருகிறது. இதில், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்தும் பேஜர்கள்,வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியதில் நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமை அலுவலக கட்டிடத்தை நவீன வெடிகுண்டுகள் மூலம் இஸ்ரேல் தகர்த்தது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும், முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டனர். காசா மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், லெபனான் மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் 30 இடங்கள் மீது இஸ்ரேல் விமான படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் நீண்ட நேரம் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதனால் மத்திய கிழக்கில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் குறிப்பாக செப்டம்பர் 23ம் தேதிக்கு பிறகு நடந்த இஸ்ரேல் நடவடிக்கையில் 2000 பேர் பலியானதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி: பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gaza mosque ,Beirut ,Deir al-Balah ,Gaza ,Israel ,Palestine ,Palestinians ,Lebanon ,Dinakaran ,
× RELATED கொலை முயற்சி நடந்த...