×

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு

தெஹ்ரான்: பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் முற்றி இன்றைக்கு லெபனான், காசா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழலில் கடந்த 2ம் தேதி இரவு இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் விமானப் படை தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. ஈரானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதன்படி, ஈரானின் 6 நகரங்களில் உள்ள அணு உலைகள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரானை குறிவைத்து விரைவில் மிக பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஈரான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் ெகாண்ட உயர் தலைவரான அயதுல்லா அலி காமெனி நேற்று ஈரான் மக்களிடம் உரையாற்றினார்.

பாக்தாத்தில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் 2020ல் கொல்லப்பட்ட புரட்சிக் காவலர் ஜெனரல் காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பிறகு மக்கள் முன்பு தோன்றிய 80 வயதான காமெனி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய பிரார்த்தனை தளமான மொசல்லா மசூதியில் ஆயிரக்கணக்கான மக்களிடம் 40 நிமிடம் ஆவேசமாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு மிகுந்த பாராட்டுகள்.

இந்த தாக்குதலை நடத்திய ஈரான் ஆயுதப்படை மிகவும் நேர்த்தியாக செயல்பட்டது. தேவைப்பட்டால் மீண்டும் அது போன்ற ஒரு தாக்குதலுக்கு ஈரான் தயாராக உள்ளது. அமெரிக்க நாசகாரக் கப்பல்கள் தான் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து இஸ்ரேலுக்கு உதவியது. ஆனாலும் ஈரான் ஏவுகணைகளில் பெரும்பாலானவை தங்கள் இலக்குகளை குறிவைத்து தாக்கியது. ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா மற்றும் லெபனான் வரையுள்ள முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

நமது எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்த போரில் பலர் உயிர் இழந்துள்ளனர். லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் நமது எதிரிகளை எதிர்க்கும் துணிச்சலான போராளிகளே, விசுவாசமான, பொறுமையான மக்களே, உங்களின் இந்த தியாகங்கள் , நீங்கள் சிந்திய ரத்தம் உங்கள் உறுதியை அசைக்கக் கூடாது. மாறாக உங்களை மேலும் விடாமுயற்சியுடன் இருக்கச் செய்ய வேண்டும்.

ஏனெனில்பிரிவினை என்ற விதையை விதைத்து, அனைத்து முஸ்லிம்களுக்கும் இடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதுதான் நமது எதிரியின் முதல் வேலை. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது. இந்த பிராந்தியத்தில் இருந்து மேற்கு நாடுகளுக்கு எரிசக்தியை ஏற்றுமதி செய்வதற்கான நுழைவாயிலாக இஸ்ரேலை மாற்ற முயற்சி நடக்கிறது. ஆனால், நமது பிராந்தியத்தின் எதிர்ப்பு சக்தி, இஸ்ரேலுக்கு எதிராக பின்வாங்காது. இதற்காக அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட வேண்டும்.

தற்காப்புக்காக தயாராக வேண்டும். இஸ்ரேலை எதிர்கொள்வதில் ஈரான் தாமதம் செய்யாது. பாலஸ்தீனர்களுக்கும், லெபனானியர்களுக்கும், எகிப்தியர்களுக்கும், ஈரானியர்களுக்கும், ஏமன் மற்றும் சிரியா நாட்டின் மக்களுக்கும் இஸ்ரேல் எதிரி தான். ஒவ்வொரு மக்களுக்கும் கொடுங்கோன்மைக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

* லெபனான்-சிரியா எல்லையை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல்
இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தப்பியோடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதி வழியாக சிரியாவுக்கு தப்பி செல்வதை தடுக்க நேற்று இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இதனால் எல்லை பகுதியில் உள்ள அனைத்து கட்டமைப்புகளும் தகர்ந்தன. மேலும் எல்லையில் உள்ள லெபனான் கட்டிடங்கள் உருக்குலைந்தன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு கிழக்கே சுமார் 50 கிமீ தொலைவில் லெபனான்-சிரியா எல்லையில் உள்ள மஸ்னா பார்டர் கிராசிங் அருகே உள்ள சாலை இதனால் மூடப்பட்டது. ஈரான்

* வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் கொடூர தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட் சென்றார். அங்கு அவர் இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா படைக்கும் இடையில் நடக்கும் போர் குறித்து லெபனான் அதிகாரிகளுடன் விவாதித்தார். அதன்பின்னர் அவர் கூறுகையில்,’ ஈரான் மீது இஸ்ரேல் எந்தவித தாக்குதல் நடவடிக்கையையும் தொடர்ந்தால் எங்கள் பதிலடி அக்.2ம் தேதி நடந்த தாக்குதலை விட மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்றார்.

* இந்தியா உதவ ஈரான் திடீர் கோரிக்கை
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் முழு அளவில் போர் வெடிப்பதை தடுக்க இந்தியா உதவ வேண்டும் என்று இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி தெரிவித்தார்.

 

The post முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி காமெனி ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Tags : Israel ,Iranian Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,Tehran ,Hamas ,Palestine ,Gaza ,Lebanon ,Syria ,Yemen ,Supreme Leader ,
× RELATED மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல்...