×

ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம்

டெல்அவிவ்: ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது மும்முனை தாக்குதல் இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், ஈரானின் எண்ணெய் கிணறுகள், அணு உலைகளை தகர்க்க குறி வைத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே ஓராண்டாக நடைபெற்று வரும் போரில், இதுவரை 41,788 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 96,794 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 27ம் தேதி இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட சில தலைவர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, லெபனானின் தலைநகர் பெய்ரூட் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும் 151 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானம் நடத்திய தாக்குதலில் 18 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களில் காசா பகுதியில் ஐ.நா.வால் நடத்தப்படும் மூன்று பள்ளிக்கூடங்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறாக காசா, மேற்குகரை, லெபனான் என்று மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதேபோல, ஏமன் நாட்டின் ஹவுதி தீவிரவாதிகள், சிரியாவின் ஷியா பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுக்களும் இஸ்ரேலை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களுக்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

எனவே லெபனான், காசா, சிரியா, ஏமன், மேற்குகரை ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதி மட்டும் தற்போது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாசின் மூத்த தலைவர் ரவுகி முஸ்தாகா, திரைமறைவில் காசாவின் பிரதமராக செயல்பட்டு வந்தார். அவரையும் நேற்று இஸ்ரேல் கொன்றது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல் குவாசிர், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பதுங்கி இருந்தார். அவர் தங்கியிருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டுகளை வீசின. இதில் ஹசன் ஜாபர் அல் குவாசிர் பலியானார். லெபனானில் தரைவழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பாத்திமா கேட்பகுதி வழியாக தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். லெபனானின் 40 நகரங்களை சேர்ந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் 25 ஏவுகணைகளை வீசினர். அவற்றை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. லெபனானின் மரூன் அல்-ராஸுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், 17 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. எனவே லெபனான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடையும் நிலையில் லெபனானில் வசிக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு மக்கள் உடனே வெளியேறுமாறு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே தங்கள் நாட்டு மக்களை லெபனானில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளன. இதற்கிடையே ஈரானின் 6 நகரங்களில் உள்ள அணு உலைகள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என அறிவுறுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘இதுகுறித்து பொது வெளியில் பேசமாட்டேன்’ என்றார். எனவே ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து விரைவில் மிக பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானின் எண்ணெய் கிணறுகள், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுமா? என்பது குறித்து இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன் கூறுகையில், ‘நிறைய வாய்ப்புகள் உள்ளது; ஈரானுக்கு எங்களது வலிமையை விரைவில் காண்பிப்போம்’ என்று கூறினார்.

எனவே ஈரானின் எண்ணெய் கிணறுகள், அணு உலைகள் மீது இன்றோ, அடுத்த ஓரிரு நாட்களிலோ அதிரடி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று மட்டும் ஒரே நாளில் லெபனானின் உள்கட்டமைப்பு தளங்கள், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் உட்பட சுமார் 200 நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் மூன்று வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதில், ஹிஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகம் தகர்க்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் 1,950க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாகவும், 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

The post ஒரே நேரத்தில் காசா, மேற்குகரை, லெபனான் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல்; ஈரான் எண்ணெய் கிணறு, அணு உலைக்கு குறி: மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் போர் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Gaza ,Western Sahara ,Lebanon ,Iran ,Middle East ,Tel Aviv ,Israel ,Palestine ,Middle East Region ,Dinakaran ,
× RELATED காசாவில் இஸ்ரேல் தாக்குதல் பலி எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியது