2 துண்டான தண்டவாளம் செயினை இழுத்த பயணிகள்: விபத்தில் இருந்து தப்பிய சென்னை எக்ஸ்பிரஸ்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளம் இரண்டாக உடைந்து கிடந்ததை ஊழியர் பார்த்து எச்சரிக்கை விடுக்கவே, பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக நேற்று காலை 8:40 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. 2 நிமிடம் கழித்து மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

அப்போது, அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர், தண்டவாளம் இரண்டு துண்டாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இவ்வழியாக ரயிலை இயக்க வேண்டாம் என அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுப்பதற்குள்ளாக சம்பவ பகுதிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கி வந்துவிட்டது. இதைக்கண்ட ரயில்வே ஊழியர், ரயிலை நிறுத்தும்படி கூச்சலிட்டு கத்தினார்.

இதை ரயிலில் இருந்த பயணிகள் கவனித்தனர். மேலும் அவர்களுக்கு, ‘டம், டம்’ என சத்தம் கேட்டுள்ளதாம். இதையடுத்து, ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த பயணிகள் அலறிய நிலையில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர், ரயிலில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் கீழே குதித்து ஓடி ஓரமாக நின்றனர். இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் உடைந்த தண்டவாள பகுதியில் இணைப்பு சட்டங்கள் பொருத்தி தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 40 நிமிடம் தாமதமாக திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து, தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பை ஊழியர்கள் முழுமையான நிலையில் சீரமைத்தனர். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பை கண்டறிந்து ரயில்வே ஊழியர் கூச்சலிட்டதாலும், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாலும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

The post 2 துண்டான தண்டவாளம் செயினை இழுத்த பயணிகள்: விபத்தில் இருந்து தப்பிய சென்னை எக்ஸ்பிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: