×

மெரினாவில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு: முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் பிரமாண்ட போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 92வது இந்திய விமானப் படை தினம் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் சென்னை மெரினா கடற்கரையில் ஏர்ஷோ எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதற்காக 2 மற்றும் 3ம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மேலும் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் காணும் வகையில் விமான சாகச முழு ஒத்திகை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன.

இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர். இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி மெரினா கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2003ம் ஆண்டு விமானப்படை தினத்தன்று சென்னையில் வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தற்போது 21 ஆண்டுகள் கழித்து சென்னை மெரினாவில் மீண்டும் விமானப்படை தினத்தன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில்,‘‘15 லட்சம் பேர் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை மெரினா கடற்கரையில் பார்க்க உள்ளனர். இதற்காக 20 தீயணைப்பு வண்டிகள், 20 ஆம்புலன்ஸ், மருத்துவ குழு அமைக்கப்பட உள்ளது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவ வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

* இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் காணும் வகையில் விமான சாகச முழு ஒத்திகை நடைபெற உள்ளது

The post மெரினாவில் நாளை மறுநாள் வான் சாகச நிகழ்ச்சி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு: முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொள்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Marina Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Union Minister ,Rajnath Singh ,CHENNAI ,Chennai Marina Beach ,Union Home Minister ,Indian Air Force Day ,M.K.Stalin ,
× RELATED பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க...