×
Saravana Stores

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 12ம் தேதி வரை நவராத்திரி விழா: ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 12ம் தேதி வரை நடைபெற உள்ள நவராத்திரி விழாவை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா இன்று காலை தொடங்கி 12ம்தேதி வரை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை தொடர்ந்து நடைபெற உள்ளது. விழாவையொட்டி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வரவேற்பளித்தனர். இதையடுத்து கருவறைக்கு சென்று ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதணை செய்து அருகிலுள்ள குருபீடத்தில் மலர் தூவி பூஜை செய்தார்.

இதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவையொட்டி கருவறையில் சுயம்பு அம்மன் முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். சித்தர் பீடம் உள் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த முக்கோணம், அறுகோணம், செவ்வகம், எண்கோணம், வட்டம் போன்ற சக்கரங்கள் அமைத்து அவற்றின் மேல் அதே வடிவத்தில் அமர்ந்திருந்த கன்னியர்கள், சிறுவர், சிறுமியர், நடுத்தர, இளம் மற்றும் மூத்த சுமங்கலிகள் கைகளில் வெவ்வேறு விளக்குகள் ஏற்றி வரவேற்க, அகண்ட தீபத்தினை 3 பெண்கள் கையில் ஏந்தியபடி சித்தர்பீட உள் பிரகாரத்தை சுற்றிவந்து கருவறையினுள் தென்கிழக்கு திசையில் உள்ள அக்னி மூலையில் அமைக்கப் பட்டிருந்த தனிமேடையில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் எடுக்கப்பட்டன.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தீப ஒளியை வழிபட்டனர். லட்சார்ச்சனைக்கு பதிவு செய்த பக்தர்கள் நட்சத்திரம் மற்றும் பெயர் சொல்லி சங்கல்பம் செய்து 1008, 108 தமிழ் மந்திரங்கள் படித்திட லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 10.20 மணிக்கு தொடங்கிய அமாவாசை வேள்வி நள்ளிரவு வரை நடைபெற்றது. விழாவில், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் இயக்க துணை தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சென்னை மாவட்ட சக்தி பீடங்களும், மன்றங்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 12ம் தேதி வரை நவராத்திரி விழா: ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Navratri Festival ,Melmaruvathur ,Atiprashakti Siddhar ,Peadha ,Lakshmi Bhangaru ,Adikaru Adidyar ,Lakshmi Bhangaru Adidytar Adidytar ,Faculty ,Akanata Deepam ,Atiprashakti Chittar Faculty ,Atiprashakti Siddhar Faculty ,Movement ,Lakshmi Bhangaru Adikar ,Adikar ,
× RELATED இளம்பெண்ணிடம் சில்மிஷம் டிரைவர் கைது வந்தவாசி அருகே