×

உத்தரபிரதேசத்தில் பரபரப்பு; கோயில்களில் சாய்பாபா சிலைகள் அகற்றம்: சனாதன ரக்‌ஷக் தளம் நடவடிக்கை

வாரணாசி: உத்தரபிரதேசத்தில் பல கோயில்களில் சாய்பாபா சிலைகளை சனாதன ரக்‌ஷக் தளம் அகற்றியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோயில்களில் சாய்பாபா சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனாதன ரக்‌ஷக்தளம் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் நேற்று வாரணாசியில் உள்ள பல்வேறு கோயில்களுக்குள் புகுந்து சாய்பாபா சிலைகளை அகற்றினர். மேலும், புகழ்பெற்ற வாரணாசி படா கணேஷ் கோயிலில் இருந்தும் சாய்பாபா சிலை அகற்றப்பட்டது. சிலைகளை கோயிலுக்கு வெளியே வைத்து விட்டு சென்றனர். இதற்கு மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டியில் உள்ள  சாய்பாபா சனாதன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாய்பாபா இதுவரை கண்டிராத மாபெரும் துறவிகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.

அபாரமான சக்திகளை கொண்டவர். கடவுள் அவதாரமாக சாய்பாபா போற்றப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலைகள் அகற்றப்பட்டதற்கு பக்தர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உ.பி. படா கணேஷ் கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு கூறும்போது, ‘சாய்பாபாவை தெளிவான அறிவு இல்லாமல் பக்தர்கள் வழிபடுகின்றனர். இது சாஸ்திரப்படி தடை செய்யப்பட்டுள்ளது’ என்றார். வாரணாசி அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர்பூரி கூறும்போது, ‘சாய்பாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை’ என்றார்.

அயோத்தி அனுமன்கர்ஹி கோயிலின் மஹந்த் ராஜு தாஸ் கூறுகையில், ‘சாய்பாபா ஒரு மதபோதகர், மிகப்பெரிய குரு. பெரியதுறவி. ஆனால் கடவுள் கிடையாது. எனவே அவரது சிலையை அகற்றியவர்களுக்கு நன்றி. நாட்டிலுள்ள கோயில்களில் சாய்பாபா சிலை வைக்கப்பட்டிருந்தால் அதை சனாதனிகள் அகற்றவேண்டும். காசியில் சிவனை மட்டுமே வழிபட வேண்டும்’ என்றார்.
உ.பி. வாரணாசியில் மட்டும் 10 கோயில்களில் இருந்த சாய்பாபா சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து சிக்ரா பகுதியிலுள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோயில் அர்ச்சகர் சமர் கோஷ் கூறும்போது, “இன்று சனாதனிகள் என்று கூறி கொள்ளும் நபர்கள்தான் முன்பு இங்கு சாய்பாபா கோயில்களை அமைத்தனர். அவர்கள்தான் இன்று சிலைகளை அகற்றியுள்ளனர். எந்த வடிவத்திலும் கடவுளை காணலாம். எனவே, சாய்பாபா சிலைகளை அகற்ற கூடாது. அது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை புண்படுத்தும். சமூகத்தில் முரண்பாடான கருத்துகளை பரப்பும்’ என்றார்.

 

The post உத்தரபிரதேசத்தில் பரபரப்பு; கோயில்களில் சாய்பாபா சிலைகள் அகற்றம்: சனாதன ரக்‌ஷக் தளம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,SAIBABA ,SANATANA RAKHSHAQ ,Varanasi ,Sanatana Rakshaq ,Uttar Pradesh Varanasi ,Sanadana Rakshaktalam ,Sanathana Rakshak ,
× RELATED லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர்...