×

வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது; தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா: விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை

மூலிகை பொருட்கள் குறைந்த விலையில் வாங்கலாம்

வேலூர் மாவட்டம் கடந்த 2019 நவம்பர் 28ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னர், இம்மாவட்டத்தில் இருந்த நவ்லாக் அரசு தோட்டக்கலைப் பண்ணை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. எனவே, வேலூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணையுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா ஒன்றினை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி வேலூர் மாவட்டம், அகரம்சேரி கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியாத்தம் தாலுகாவில் வரும் அகரம்சேரி கிராமத்தில் தற்பொழுது அமைய உள்ள இந்த பூங்கா பரப்பளவில் பெரியதாகவும், அதிகமான சிறப்பினங்களை உள்ளடக்கிய உலக தரமான பூங்காவாகவும் விளங்கும். இப்பூங்கா அமைவதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தற்போது உள்ள அரசு தாவரவியல் பூங்காக்களில் உதகை பூங்காவின் பரப்பளவு 55 ஏக்கர், ஊட்டி ரோஸ் கார்டன் 10 ஏக்கர், குன்னூர் சிம்ஸ் பூங்காவின் பரப்பளவு 30 ஏக்கர், ஏற்காட்டில் உள்ள பூங்காவின் பரப்பளவு 20.50 ஏக்கர் மட்டுமே. அதன்படி அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள இப்பூங்காவுக்கு மாநிலத்திலேயே மிகப்பெரிய பூங்கா என்ற பெருமை கிடைக்கும். இந்த பூங்காவில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய பாரம்பரிய மருத்துவங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகைப் பயிர்கள் அடங்கிய செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள், வேளாண் பெருமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

மேலும் இந்த பொழுபோக்குப் பூங்காவில் தோட்டக்கலையில் உள்ள அனைத்து தாவரங்களும் அடங்கிய பல பயிர்ப் பூங்கா, நாட்டுத் தாவரங்கள் அடங்கிய பூங்கா, பல்லடுக்குப் பூங்கா, புல்தரை, நீண்ட நெடிய நடைபாதை, நட்சத்திரப் பூங்கா, போகன் வில்லா பூங்கா, செம்பருத்திப் பூங்கா, சிறிய நிழற்குடில்கள், அலங்கார வளைவுகள், வெளிக் கூட்டரங்கங்கள், உள் கூட்டரங்கங்கள், தாமரைத் தடாகம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தப் பூங்கா திகழும். மேலும் செயற்கை நீரூற்றுகள், குளங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கென சிறிய புகை வண்டி, மின்கலனால் இயக்கப்படும் ஊர்திகள் முதலிய அம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. இங்கு ஏற்கனவே உள்ள மரங்கள், புதிதாக நடவு செய்யப்படும் மரங்கள், அனைத்து தாவரங்களுக்கும் அவற்றின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பொறிக்கப்பட்டு பதாகைகள் அமைக்கப்படும். இப்பதாகைகளில் இத்தாவரங்களுக்கான பாரம்பரிய சிறப்பம்சங்கள், தெய்வீக தன்மைகள், மருத்துவக் குணங்கள், சுற்றுச்சூழல் சிறப்பு குணங்கள் முதலிய விவரங்கள் தெளிவாக பொறிக்கப்படும்.

மேலும் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மா, கொய்யா, சப்போட்டா, பலா, நாவல், எலுமிச்சை, மாதுளை, சீதா, கொடுக்காய்புளி போன்ற பழப் பயிர்களும், தென்னை நாற்றுகளும், காய்கறி நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மானியத்திலும் குறைந்த விலையிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அரசு தோட்டக்கலைப் பண்ணை மற்றும் பொழுதுபோக்குப் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் அமைத்துப் பராமரிக்கப்பட உள்ளது. தற்போது பூங்கா அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூங்காவில் மூலிகை செடிகளின் குணங்களை அறிந்து வாங்கவும், பொழுது போக்கவும், விவசாயிகள் தரமான நாற்றுகள் வாங்கவும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமையும் தோட்டக்கலை பூங்கா தமிழ்நாட்டின் மிகப்பெரிய பூங்காவாக இருக்கும். இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பூங்காவை சுற்றி தடுப்பு வேலி, போர்வேல், செடிகள் வளர்க்க பசுமை குடில் அமைக்கபட்டுள்ளது. மேலும், பூங்காவில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ₹40 லட்சம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதற்கிடையில் விற்பனை மையம் கட்ட ₹10 லட்சம் நிதி வந்துள்ளது’ என்றனர்.

பூங்காவில் 1000 மரக்கன்றுகள்
அகரம்சேரியில் அமையும் 85 ஏக்கர் தோட்டக்கலை பூங்காவில் 1000 மரக்கன்று நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இதில் செம்மரம், சந்தன மரம், தேக்கு, கொன்றை மரம், மகிழ்மரம், மந்தாரை, செண்பக மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர மூலிகை தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் சுற்றுலா
பயணிகள் வர வாய்ப்பு
தோட்டக்கலை பூங்கா சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு செல்பவர்களும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்பவர்களும் இங்கு பொழுது போக்கி, மூலிகை செடிகளின் விவரங்களை அறிந்து வாங்கி செல்வார்கள். இதனால் இந்த பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது; தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா: விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Agaramsery ,Tamil Nadu ,Ranipet ,Tirupattur ,Nowlag Government Horticulture Farm ,Ranipet district ,Akaramsery ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85...