×

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி – திருநெல்வேலி இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவுற்று உள்ளதால், திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் நெடுஞ்தூர ரயில்கள், கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. ஏற்கனவே மதுரை முதல் சென்னை வரையிலான பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுரி முதல் மதுரை வரையிலான பணிகள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. புதிய தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கி சோதனையும் நடந்து உள்ளது. தற்போது பணிகள் திருப்திகரமாக இருப்பதால், புதிய தண்டவாளத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. எனவே கன்னியாகுமரியை மையமாக வைத்து கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டம் தமிழ்நாட்டில் இருந்தாலும் ரயில்வே துறை நிர்வாகத்தில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் கீழ் உள்ளது. ஆனால் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி ரயில் நிலையம் கோட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள காரணத்தால் மதுரை கோட்டம் தங்கள் கோட்டத்தின் பகுதியிலிருந்து இயக்கப்படும் நெடுந்தூர ரயில்களை திருநெல்வேலியில் இருந்து புறப்படுமாறு இயக்கி வருகிறது.

ஆனால் திருவனந்தபுரம் கோட்டம் கன்னியாகுமரியிலிருந்து கேரளா மார்க்கமாக நெடுந்தூர ரயில்களை இயக்கி வருகிறது. இவ்வாறு இரண்டு கோட்டங்களும் தங்கள் பகுதியில் உள்ள இடங்கள் வழியாக ரயில்களை இயக்கி வருவதால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. குமரி மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவைகள் அதிக அளவில் 80 முதல் 90 சதமானம் வரை திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக உள்ளது. தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதை இரட்டை பாதைகள் பணிகள் முடிவு பெற்று ரயில்கள் இயங்கி வருகின்றன. இதனால் திருநெல்வேலியிருந்து இயக்கப்படும் திருநெல்வேலி – கத்ரா வாராந்திர ரயில் (வழி மதுரை, திருச்சி, ஈரோடு,சேலம், காட்பாடி, திருப்பதி), திருநெல்வேலி – புருலியா (வாரம் இருமுறை வழி மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சென்னை பெரம்பூர், விஜயவாடா), திருநெல்வேலி – தாதர் வாராந்திர ரயில், திருநெல்வேலி – தாதர் வாரம் மூன்று முறை ரயில், திருநெல்வேலி – ஷாலிமார் சிறப்பு ரயில், திருநெல்வேலி – பாட்னா சிறப்பு ரயில்களை தமிழ்நாட்டின் கடைசி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் திருநெல்வேலியிருந்து பல்வேறு பகுதிகளுக்கு வாராந்திர நெடுந்தூர ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இது போன்ற ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும். இவ்வாறு திருநெல்வேலியிருந்து புறப்படும் ரயில்களை கன்னியாகுமரியிலிருந்து இயக்கும் போது திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவிலிருந்து கேரளா மார்க்கம் இயங்கும் ஒரு சில நெடுந்தூர ரயில்களை தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியிருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. குறிப்பாக கொச்சுவேலி – ஸ்ரீகங்காநகர் வாராந்திர ரயில், எர்ணாகுளம் – ஓக்கா வாரம் இருமுறை ரயில், மட்கான் – ஹாப்பா வாராந்திர ரயில், நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர ரயில் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

The post திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Nedundur ,Kanyakumari ,Nagarko ,Chennai ,
× RELATED கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு