×

ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம் கொலை குற்றவாளியை கத்தியால் சரமாரி குத்திய 2 நண்பர்கள் கைது

தவளக்குப்பம் : ஜாமீனில் எடுக்காததால் கொலை குற்றவாளியை கத்தியால் சரமாரியாக குத்திய 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மணவெளி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (38). டிரைவர். திருமணமாகி கஸ்தூரி (39) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 23ம் தேதி அரியாங்குப்பம் சாலை புதுக்குப்பத்தை சேர்ந்த அலெக்ஸ் (எ) ஆனந்த் என்பவருடன், மணவெளி சாராயக்கடையில் ஏற்பட்ட மோதலில், ஏற்கனவே கொலை குற்றவாளிகளான மணவெளி வெங்கடேசன், செல்வக்குமார் ஆகியோருடன் சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொன்றனர். இது தொடர்பாக இளையராஜா உள்பட 3 பேரையும், அரியாங்குப்பம் போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, 3 குற்றவாளிகளில் இளையராஜாவை மட்டும், அவரது மனைவி கஸ்தூரி கடந்த ஜூலை 27ம் தேதி ஜாமீனில் எடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார். இது சக குற்றவாளிகளான வெங்கடேசன், செல்வக்குமார் ஆகியோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் செல்வக்குமாரும், அதனை தொடர்ந்து கடந்த 25ம் தேதி வெங்கடேசனும் ஜாமீனில் வெளியே வந்தனர். வெளியில் வந்த மறுதினம் வெங்கடேசன், இளையராஜாவின் வீட்டுக்கு சென்று, அவரது மனைவி கஸ்தூரியிடம் எங்களை ஏன் வெளியில் எடுக்கவில்லை, இதனால் உனது கணவனை என்ன செய்கிறேன் பாரு? என மிரட்டல் விடுத்தாராம்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் வெங்கடேசன், இளையராஜா, செல்வக்குமார் ஆகிய 3 பேரும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பாலம் அருகேவுள்ள அலுத்துவெளி ஐயனார் கோயில் எதிரே அமர்ந்து சாராயம் குடித்துள்ளனர். அப்போது 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து கைகலப்பு ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளையராஜாவின் இடது மார்பில் குத்தியுள்ளார். பின்னர் செல்வக்குமார் பிளாஸ்டிக் பைப்பால் பின்தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா, அவர்களிடம் இருந்து ஆற்றில் குதித்து தப்பினார். அவருக்கு புதுவை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வெங்கடேசனையும், தவளக்குப்பம் காவல் துறையினர் செல்வக்குமாரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். வெங்கடேசன் (எ) பேய் வெங்கடேசன் மீது திருக்கனூர் பகுதியில் கூட்டு கொள்ளை, கடந்த 2009ம் ஆண்டு அரியாங்குப்பம் பகுதியில் சாந்தமூர்த்தி, ராஜீவ்காந்தி இரட்டைகொலை வழக்கு, 2013ல் ஏனாம் சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொல்ல திட்டமிட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து ஐகோர்ட் ஜாமீனில் வெளியே வந்தவர். மேலும், வெங்கடேசன் சிறையில் இருக்கும்போதே அவர் மீது குண்டாஸ் வழக்கு பதிய போலீசார் பரிந்துரை செய்து, அது நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம் கொலை குற்றவாளியை கத்தியால் சரமாரி குத்திய 2 நண்பர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Daalakupam ,Ilayaraja ,Manaveli ,Puducherry ,Musk ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் எடுக்காததால் ஆத்திரம் கொலை...