மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1.82 லட்சம் நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய காவல்துறை சார்பில் ஆர்டிஓவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் 2024ம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ம் ஆண்டில் இதே ஜூலை மாதம் வரையில் 10,589 மரண விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 11,106 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசாரின் தீவிர விழிப்புணர்வுகள், ரோந்து பணிகள் போன்ற செயல்களினால், 2023ம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 523 (5%) அபாயகரமான விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளதால், 570 உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

அதேபோல், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மொத்தம் 1,05,097 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனம் ஓட்டியதாக 1,35,771 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தியதாக 2,31,624 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மாநிலம் முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக சுமை ஏற்றிய சரக்கு வாகனங்கள் மீது 6,946 வழக்குகளும், பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மீது 74,013 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த 6 விதிகளை மீறியதாக மொத்தம் 6,66,721 வழக்குகள் வாகன ஓட்டிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 35,78,763 வழக்குகளும், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 3,39,434 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் மொத்தம் 39, 18,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக 76, 15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன விதிகளை மீறிய 1, 82,375 நபர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்டிஓ) பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 39,924 எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிமங்கள் அதிகாரிகளால் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிகள் குறித்து 19.31 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் விளைவுகள், அதிவேகத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து சிக்னல்களில் ஹாட்ஸ்பாட் கல்வி மற்றும் போக்குவரத்து பூங்காக்களுக்குச் செல்லும் போது துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆணையம் மூலம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் மொத்தம் 44,408 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 19, 31,225 பேருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்
பட்டுள்ளது.

ரோந்து வாகனங்கள் மூலம் காப்பாற்றப்பட்ட 8,809 பேர்
தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிக்காக தற்போது 218 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு, டிஜிபி அலுவலகத்தின் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில், அதாவது கடந்த 7 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துக்களில் படுகாயமடைந்த 8,809 நபர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. மொத்தத்தில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 14,957 பேருக்கு உதவியுள்ளன.

The post மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: