ஆடைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்கிறது ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல்: பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

திருப்பூர்: ஆடைகள் மீதான ஜிஎஸ்டியை 18% உயர்த்த முடிவெடுத்து உள்ளதன் மூலம் ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். மக்களின் உணவு தேவைக்கு அடுத்தபடியாக உடை அடிப்படை தேவையாக உள்ளது. உயிர் வாழக்கூடிய அனைவரும் ஜவுளித்துறையின் வாடிக்கையாளர்களே.

140 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் ஜவுளிச்சந்தை உலக வர்த்தகர்களின் முதல் தேர்வாக இருந்தது. ஆனால், ஒன்றிய பாஜ அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்காதது, துணிகள் இறக்குமதிக்கு சலுகை வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் ஜவுளி சந்தை சரிவை நோக்கி சென்றது. 35 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்த இந்தியாவின் ஜவுளி தொழில் சர்வதேச அளவில் 6வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.

சரிந்த தொழில் இன்னும் சரிவர மீண்டெழாத நிலையில் 5% ஜிஎஸ்டி என்பதை 12% உயர்த்த பரிந்துரை செய்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு மாற்றங்கள் தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழுவினரின் கூட்டமானது கோவாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதியமைச்சர் சந்துரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரியில் மாற்றம் மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு பொருட்களுக்கு 12% வரி விதிப்பில் இருந்து 5% குறைப்பது என பரிந்துரை அளித்திருக்கிறோம், அதே நேரத்தில் ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பொருட்களுக்கு வரியினை உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒன்றாக ஜவுளி மற்றும் ஆடைகள் மீதான 5% ஜிஎஸ்டியை 12% உயர்த்தவும், ரூ.1000க்கு மேல் விற்பனை செய்யப்படும் ரெடிமேட் ஆடைகளுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.

ஆனால், இதற்கு பல்வேறு மாநில அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும், வரும் அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடனான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான விவாதம் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் கோவை வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜவுளித்துறை உட்பட பல்வேறு தொழில்துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு ஜிஎஸ்டி வரி தொடர்பான தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது, பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்து சென்றார். ஆனால், உறுதி அளித்து இரு வாரங்களுக்குள்ளாக ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டியை உயர்த்துவது குறித்த பரிந்துரையை முன்வைத்து இருப்பது ஜவுளி துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே ஜவுளி துணிகளுக்கான 5% ஜிஎஸ்டியை 12 சதவீதமாக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு ஜவுளி துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு மக்கள் நலனுக்காகவோ, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் நலனுக்காகவோ இல்லாமல் கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு திருப்பூரில் தொழில் நிலை படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

மீண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு பதிலாக மீண்டும் அதனை சரிவு பாதைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதன்படி ஜவுளி மற்றும் ஆடைகளின் மீதான 5% ஜிஎஸ்டியை 12% உயர்த்தும் பட்சத்தில் தொழில் நலிவடைவது மட்டுமல்லாமல் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடிய நிலையும் ஏற்படும்’’ என்றார்.

* ஒன்றிய பாஜ அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்காதது, துணிகள் இறக்குமதிக்கு சலுகை வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் ஜவுளி சந்தை சரிவை நோக்கி சென்றது.

* தொழிலாளியான முதலாளிகள்
கடந்த 2017 ஜூன் 1ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்கள் பெரும் பின்னடைவை நோக்கி சென்றன. குட்டி ஜப்பான், டாலர் சிட்டி என அழைக்கப்பட்ட திருப்பூரில் செயல்பட்டு வந்த சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் 50 சதவீதம் அடைக்கப்பட்டன. தொழிலாளர்களை முதலாளிகளாக்க கூடிய ஆற்றல் மிகுந்த திருப்பூரில் முதலாளிகளும் கூட தொழிலாளர்களாக மாறிய சூழல் ஏற்பட்டது.

ஏற்றுமதி ஆர்டர்களை எடுத்து செய்யக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் இழப்பை எதிர் கொண்டு மீண்டு வந்தாலும் கூட சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், மீண்டும் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கான பரிந்துரை என்பது சிறு குறு நடுத்தர ஜவுளி நிறுவனங்களை முழுவதுமாக அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லும் திட்டமாகவே ஜவுளித்துறையினர் கருதுகின்றனர்.

* புதிய ஜவுளி கொள்கை உருவாக்கப்படுமா?
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் புதிய நிதிக் கொள்கையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வரும் ஜவுளிதுறையை மீட்க புதிய ஜவுளி கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கி மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட வேண்டும். ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்பு பல்வேறு சிறு தவறுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில் சிறப்பு சமாதான் திட்டம் வாயிலாக அதற்கு சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஜவுளித்துறையினரின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

* வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை
‘ஜிஎஸ்டி மூலம் வருவாய் பெருக்குவதற்கான நடவடிக்கை என்ற பெயரில் சில பொருட்களுக்கு வரி உயர்வு அளிக்கும் பட்சத்தில் அதன்மூலம் ஏராளமானவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகவும் சலுகைகளை வழங்கி உள்நாட்டில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது’ என்று தொழில்முனைவோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

* சீன துணிகளுக்கு ஒன்றிய அரசு வரி விலக்கு
ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் உற்பத்தி செய்யும் பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகளவு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஜவுளித்துறையினரின் கோரிக்கை. ஆனால், அதனை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் துணிகளை வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு வரி விலக்கு அளித்ததன் காரணமாக ஜவுளி தொழில் கடந்த சில ஆண்டுகளாகவே பின்னடைவை சந்தித்து வருகிறது.

The post ஆடைகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்கிறது ஜவுளித்துறை மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல்: பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: