பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

நெல்லை:திசையன்விளை அருகே பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை சரமாரி தாக்கி நகை, செல்போன், பணம் பறித்த 2 பைக்குகளில் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கடந்த 9ம் தேதி நடந்த கபடி போட்டியை பார்க்க உவரி நடுத்தெருவைச் சேர்ந்த மீனவர் ஜெஹிந்தன் வந்திருந்தார். கபடி போட்டி முடிந்ததும் இரவு 11.15 மணியளவில் உவரிக்கு செல்வதற்காக அப்புவிளை செல்வவிநாயகர் கோயில் வளைவில் மெயின்ரோட்டில் ஜெஹிந்தன் நின்றிருந்தார். அப்போது 2 பைக்குகளில் தலா 2 பேராக வந்தவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார்.

அவர்களில் ஒரு பைக்கில் வந்த 2 பேர், ஜெஹிந்தனை ஏற்றிக் கொண்டனர். ஆனால் ஜெஹிந்தன் உவரியில் இறக்கி விடுங்கள் என்று கூறியதைக் கேட்காத அவர்கள், குட்டம் ரோட்டுக்கு பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர். அங்கு ஒரு மைதானத்தில் பைக்குகளை நிறுத்திய 4 பேரும், ஜெஹிந்தனை சரமாரி கற்களால் தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், கையில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் மற்றும் அரை பவுன் என 2 மோதிரங்கள், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1000, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்கு பதிந்து ஜெஹிந்தன் லிப்ட் கேட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் உடன்குடியை சேர்ந்த அஸ்வின் ராஜேஷ், அரவிந்த்குமார்,சதீஷ், தமிழரசன் ஆகியோர் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெய்ஹிந்தனை தாக்கி அவரிடம் பறித்த நகைகளை உடன்குடியில் உள்ள நகைக்கடையில் விற்று அந்த பணத்தில் கேரளாவுக்கு சுற்றுலா சென்று அழகிகளிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நகைகளையும், 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: