×

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்

பெய்ரூட்: பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அவரது மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. நஸ்ரல்லா மறைவுக்கு ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. பாலஸ்தீனர்கள் வாழும் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி போர் மூண்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேல் குண்டு வீசி அழித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இப்போரைக் கண்டித்து, ஹமாசுக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலுக்கு எதிராக கடந்த ஓராண்டாக சண்டையிட்டு வந்த நிலையில், தற்போது இஸ்ரேல், லெபனானை குறிவைத்து போரை விரிவுபடுத்தி உள்ளது.கடந்த 2 வாரமாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது.இந்நிலையில், பெய்ரூட்டின் தெற்கில் உள்ள தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தில் அவ்வமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தலைமையில் உயர்மட்ட கூட்டத்திற்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லாவின் தலைமையகம் அமைந்துள்ள பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலில் குண்டுமழை பொழிந்தது.

இந்த தாக்குதலில் 6 அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் சோசானி கூறுகையில், ‘‘நஸ்ரல்லாவை பல ஆண்டுகளாக கண்காணித்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக முடித்துள்ளோம். அவருடன் ஹிஸ்புல்லாவின் தென்பகுதி தளபதி அலி கார்க்கி உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பல உளவுத்தகவல்கள் மூலம் நஸ்ரல்லாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார். சில மணி நேரத்திற்குப் பிறகு ஹிஸ்புல்லா அமைப்பும் இதனை உறுதி செய்தது. ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘‘நஸ்ரல்லா தன் சக தியாகிகளுடன் இணைந்துள்ளார்’’ என குறிப்பிட்டது.

நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரையிலும் பெய்ரூட்டின் தெற்கு மற்றும் பெகா பள்ளத்தாக்கில் 140 இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தஹியாவில் ஹிஸ்புல்லாவின் பல்வேறு ஆயுத சேமிப்பு கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. பல தெருக்களிலும் குண்டுகள் வெடித்து புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் லெபனான் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

லெபனானில் கடந்த 2 வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 156 பெண்கள், 87 குழந்தைகள் உட்பட 1030 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, ஈரான், ஈராக் நாடுகளும், ஹமாஸ் அமைப்பும் நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. ஈராக்கில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிக்கிறது. இப்போரில் மேலும் சில நாடுகள் ஈடுபடும் சூழலை இஸ்ரேல் ஏற்படுத்தி உள்ளது.

* அடுத்த தலைவர் சக்தியுடன் வருவார்
நஸ்ரல்லாவின் மரண செய்தி உறுதிபடுத்தப்பட்ட உடன் பெய்ரூட் மற்றும் லெபனானின் பல பகுதிகளிலும் மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவரது மறைவுக்கு பல இடங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் வெட்கக்கேடான தாக்குதலை நடத்தியிருப்பதாக ஈராக் பிரதமர் ஷியா அல் சூடானி கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் விடுத்த அறிக்கையில், ‘‘தலைவர் ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யும் போது, அவரது பாதையில் அடுத்த தலைமுறை தலைவர் இன்னும் வீரியமாகவும் சக்தியுடனும் உறுதியுடனும் தோன்றுவார் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது’’ என கூறி உள்ளது.

* ‘இனியும் தாக்குதல் நீடிக்கும்’ ஹிஸ்புல்லா, இஸ்ரேல் அதிரடி
நஸ்ரல்லா கொல்லப்பட்ட போதிலும் தங்களின் புனிதப் போர் தொடரும் என ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், லெபனான் மக்களை காப்பாற்றவும் இஸ்ரேலுக்கு எதிரான சண்டை ஓயாது என உறுதிபடுத்தி உள்ளது. அதே போல, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலின் மிக முக்கியமான தாக்குதல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யார் போர் புரிந்தாலும் அதற்கான கடுமையான விலையை தர வேண்டியிருக்கும். இத்துடன் எங்கள் தாக்குதல் நிற்காது. இன்னும் பல இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஹிஸ்புல்லாவை முற்றிலும் அழித்து இஸ்ரேலின் எல்லைப் பகுதி மக்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு திரும்பும் வரையிலும் தாக்குதல் தொடரும்’’ என அறிவித்துள்ளார். இதற்காக இஸ்ரேல் கூடுதல் படைகளை லெபனான் எல்லையில் நிறுத்தி உள்ளது.

கொல்லப்பட்டது எப்படி?
* ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் எப்படி கொன்றது என்பது தொடர்பாக பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
* ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு கீழே மிக ரகசியமாக கட்டப்பட்ட சுரங்க கட்டிடம்.
* பொதுவாக, ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகள் அனைத்துமே மக்கள் குடியிருப்பு கட்டிடத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
* இதனால் ‘பங்கர் பஸ்டர்’ எனப்படும் பூமியை துளைத்துக் கொண்டு பாதாளத்தை தாக்கும் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது.
* இந்த குண்டுகள் தரையிலிருந்து 30 மீட்டர் ஆழத்தை துளைத்துக் கொண்டு செல்லக் கூடியது. மேலும், பூமியின் கீழ் கட்டப்பட்ட 6 மீட்டர் கான்கிரீட் அடித்தளத்தை துளைக்கக் கூடியது.
* பூமிக்கு அடியில் சென்றதும், பூகம்பம் போன்ற அதிர்வலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த கட்டிடத்தையும் தரைமட்டமாக்கி வெடித்துச் சிதறும் வகையில் தயாரிக்கப்பட்டது.
* இவை 2,000 முதல் 4000 பவுண்ட் எடை கொண்டவை.
* நஸ்ரல்லா தலைமையகத்திற்கு வந்ததை அறிந்த இஸ்ரேல் ராணுவம் தனது போர் விமானங்கள் மூலம் 85 பங்கர் பஸ்டர் குண்டுகளை அப்பகுதியில் சரமாரியாக வீசியது.
* இதில் 6 அடுக்குமாடி கட்டிடங்கள் நிர்மூலமாகின. அவற்றின் அடியில் கட்டப்பட்டிருந்த ஹிஸ்புல்லா தலைமையகமும் தகர்க்கப்பட்டது.
* இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது தலைமையகத்தில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
* இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* இஸ்ரேலில் திடீர் தடை
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பு மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்கிற அச்சம் நிலவுவதால் இஸ்ரேலில் மக்கள் அதிகளவில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை ஒரே இடத்தில் 1000 பேர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* விமானங்களை நிறுத்திய ஈரான்
நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு விமானங்களை இயக்க ஈரான் தடை விதித்துள்ளது.

* புதிய தலைவர் யார்?
நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது உறவினரான ஹசேம் சபிதீன் ஹிஸ்புல்லா தலைவராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் நஸ்ரல்லாவின் வாரிசாக நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறார்.

* யார் இந்த நஸ்ரல்லா?
நஸ்ரல்லா, பெய்ரூட்டில் கடந்த 1960ம் ஆண்டில் பிறந்தவர். இவரது வயது 64. கடந்த 1992ல் இவர் ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அடுத்த 2 நாளில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த சயீத் அப்பாஸ் முசாவி இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். அதன் பின் ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா 30 ஆண்டுக்கும் மேலாக அப்பதவியை வகித்தார். 2 முறை இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிந்துள்ளார். 1997ல் நடந்த போரில் நஸ்ரல்லா தனது மூத்த மகன் ஹாடியை பறிகொடுத்தார். 2006ல் இவரது தலைமையின் கீழ் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் போர் புரிந்தது. 34 நாட்கள் நடந்த போரில் புனித வெற்றி கிடைத்ததாக நஸ்ரல்லா அறிவித்தார். அரசியல் ரீதியாகவும் உலக நாடுகளின் ஆதரவை நஸ்ரல்லா பெற்றிருந்தார். ஆனால், 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்ட போது அந்நாட்டு பிரதமர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக படையை அனுப்பினார். இதனால் அரபு நாடுகளின் கோபத்திற்கு ஆளானார் நஸ்ரல்லா.

* மறைந்திருந்து வாழ்ந்த நஸ்ரல்லா
நஸ்ரல்லாவை பல மாதமாக இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக கண்காணித்து வந்தது. அவர் செல்லும் இடங்களை எல்லாம் கண்காணித்தது. தற்போது லெபானானில் சண்டை வலுத்துள்ள நிலையில், நஸ்ரல்லா பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார். கடைசியாக அவர் கடந்த 19ம் தேதி இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிவி சேனலில் மக்களுக்கு உரையாற்றினார். அதன் பிறகு அவர் பொது வெளியில் வரவில்லை. இனியும் விட்டால் நஸ்ரல்லாவை கொல்வது சிரமமாகிவிடும் என்பதால், நேற்று முன்தினம் அவரை இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு தீர்த்து கட்டியது.

* சிரியாவுக்கு இடம்பெயர்ந்த 50,000 பேர்
இஸ்ரேல் தாக்குதலால் பெய்ரூட்டில் வசித்த லெபனான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 50,000 பேர் சிரியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐநாவின் அகதிகளுக்கான தூதர் பிளிப்போ கிராண்டி நேற்று தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் உள்நாட்டிலேயே 2 லட்சம் பேர் வரையிலும் பாதுகாப்பான இடம் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

* ஈரான் ராணுவ தளபதியும் பலி
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுடன் ஈரான் ராணுவ தளபதி அப்பாஸ் நில்போருஷன் (58) பலியானதாக ஈரான் ராணுவம் நேற்று அறிவித்தது. நில்போருஷன் கடந்த 2022ல் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டவர். இவர் எதற்காக பெய்ரூட் சென்றார், நஸ்ரல்லாவுடன் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

* ஈரான் உச்சதலைவர்
அவசர இடமாற்றம்
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கி முழு ஆதரவாக ஈரான் இருந்து வருகிறது. இந்தநிலையில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்ததைத் தொடர்ந்து ஈரானில் அதன் உச்ச தலைவர் அயதுல்லா காமனேனி பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* நெதன்யாகு விமானத்தை குறிவைத்து தாக்குதல்?
அமெரிக்காவில் ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தலைநகர் டெல் அவிவ் திரும்பினார். அவரது விமானம் தரை இறங்கிய சிறிது நேரத்தில் டெல் அவிவ் நகரில் விமான தாக்குதல் சைரன்கள் ஒலித்ததால் பீதி ஏற்பட்டது. ஏமனில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும் அதனை இடைமறித்து அழித்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஆனால், நெதன்யாகுவின் விமானத்தை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹிஸ்புல்லாவுக்கு எதிரான சண்டையால் நெதன்யாகு தனது அமெரிக்க பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நேற்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

The post பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Hezbollah ,Beirut ,Iran, Iraq ,Middle East ,HASSAN NASRALLA ,HISBULLAH ,Hizbullah ,Iran ,Iraq ,Nasrallah ,Dinakaran ,
× RELATED ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு..!!