×

சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை இயக்கப்பட்டாலும், அனைத்து இடங்களுக்கும் பேருந்துகள் செல்வதால் மக்கள் பேருந்து போக்குவரத்தை நாடியுள்ளனர். அனைவரும் எளிதில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018ம் ஆண்டுக்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதிய தாழ்தள சொகுசு பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் சிரமம் இன்றி பேருந்துகளில் ஏறும் விதமாக இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முதற்கட்டமாக 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2வது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 2வது கட்டமாக 66 புதிய தாழ்தள பேருந்துகள்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,City Transport Corporation ,Metropolitan Transport Corporation ,Dinakaran ,
× RELATED மாநகர் போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவிதொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி