சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

தமிழக சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஜெ.ரவீந்திரன், ஆர்.நீலகண்டன், பி.குமரேசன், பி.முத்துக்குமார், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் ஒன்றிய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

* மும்பையில் சட்டம் பயின்றவர்
சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 34வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம், 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்று, 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.

The post சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Related Stories: