×

கமிந்து 182*, குசால் 106* இலங்கை 602/5 டிக்ளேர்


காலே: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 306 ரன் எடுத்திருந்தது. நிசங்கா 1, கருணரத்னே 46, சண்டிமால் 116 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 78, கமிந்து மெண்டிஸ் 51 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மேத்யூஸ் 88 ரன் (185 பந்து, 7 பவுண்டரி) விளாசி பிலிப்ஸ் பந்துவீச்சில் ஓ’ரூர்கே வசம் பிடிபட்டார். மேத்யூஸ் – கமிந்து ஜோடி 4வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. அடுத்து கமிந்து – கேப்டன் தனஞ்ஜெயா இணைந்து 5வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். தனஞ்ஜெயா 44 ரன்னில் வெளியேற, கமிந்து மெண்டிஸ் – குசால் மெண்டிஸ் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தது.

இவர்களைப் பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் விழிபிதுங்கினர். இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன் குவித்த நிலையில் (163.4 ஓவர்), முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக கேப்டன் தனஞ்ஜெயா அறிவித்தார். கமிந்து 182 ரன் (250 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்), குசால் 106 ரன்னுடன் (149 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட், சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன் எடுத்துள்ளது (14 ஓவர்). டாம் லாதம் 2, கான்வே 9 ரன்னில் வெளியேறினர். கேன் வில்லியம்சன் 6, அஜாஸ் படேல் (0) களத்தில் உள்ளனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

கமிந்து உலக சாதனை

அறிமுகமானதில் இருந்து தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் 50+ ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை, இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் வசமாகி உள்ளது. 2022ல் ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் 61 ரன் எடுத்த கமிந்து, இந்த ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக 102 & 164, 92 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 113, 74, 64, நியூசிலாந்துடன் தற்போது நடந்து வரும் தொடரில் 114, 182* என விளாசித் தள்ளி மிரட்டியுள்ளார்.

* கடந்த 75 ஆண்டுகளில் 1000 டெஸ்ட் ரன் என்ற மைல்கல்லை மிக விரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையும் கமிந்துவுக்கு கிடைத்துள்ளது. 13 இன்னிங்சில் இதை சாதித்துள்ள கமிந்து, ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 3வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஹெர்பெர்ட் சட்கிளிப், எவர்டன் வீக்ஸ் (தலா 12 இன்னிங்சில்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.

The post கமிந்து 182*, குசால் 106* இலங்கை 602/5 டிக்ளேர் appeared first on Dinakaran.

Tags : Kamindu 182 ,Gusal ,Sri Lanka ,Galle ,New Zealand ,Galle International Stadium ,Kamindu ,Kusal ,Dinakaran ,
× RELATED பொருளாதார நெருக்கடியில் இருந்து...