செங்கல்பட்டில் பரபரப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு: ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர் மணவாளன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் மனோஜிதா (20), சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு தனியார் கல்லூரியில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை காலை மனோஜிதா வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது, கையில் ஏதோ பூச்சி கடித்ததைப்போல் உணர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மனோஜிதாவின் கை வலிக்கத் துவங்கியதும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அன்று இரவு 11 மணியளவில் கல்லூரி மாணவி மனோஜிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லூரி மாணவி மனோஜிதாவை எவ்வகையான பூச்சி கடித்தது, என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பதை மருத்துவர்கள் கூறாதவரை, நாங்கள் மாணவியின் உடலை பெற்று கொள்ள மாட்டோம் என்று மனோஜிதாவின் பெற்றோர் உள்பட 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஆத்திரத்துடன் மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து, நள்ளிரவு வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று, நேற்று அதிகாலை கல்லூரி மாணவியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு உடலை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே, அரசு மருத்துவமனையின் நிலைய அலுவலர் முகுந்தன் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், செங்கல்பட்டு நகர போலீசார் செங்கல்பட்டு மாவட்டம், சிறுதவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (37) மற்றும் அருண் (34) மற்றும் மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்கல்பட்டில் பரபரப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி உயிரிழப்பு: ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: