முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சியில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் எஸ்பி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறும் திமுக பவள விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, நகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாநகரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழா மாநாட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, பாதுகாப்பு நிமித்தமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏதுமின்றி மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகரத்திற்குள் வரும் வாகனங்கள் மாற்று பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாக செல்லவும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம், வையாவூர் வழியாக செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து விழாவிற்கு வருகை தரும் அனைத்து தொண்டர்கள்,

பொதுமக்கள் ஆகியோர்கள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாகவும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கீழம்பி, செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாகவும், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாக விழா நடைபெறும் இடமான காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்திற்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி காஞ்சியில் போக்குவரத்து மாற்றம்: போலீஸ் எஸ்பி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: