மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு டிஜிபி பரிசு வழங்கினார்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிர படை பள்ளி பயிற்சி மையம் மற்றும் துப்பாக்கி சுடு தளத்தில் துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வருகிறது. இதில், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், காவல் துறை தலைவர் ஜெயஸ்ரீ தலைமையிலும், தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மேற்பார்வையிலும் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு போட்டிகளிலும், ரைபிள் (5), பிஸ்டல்-ரிவால்வர் (4) மற்றும் கார்பைன்-ஸ்டென்-கன் (4) என்ற 3 பிரிவுகளின் கீழ் 13 வகையான போட்டிகள் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகின்றன. இதில், நேற்று நடைபெற்ற ஆண் காவலர்களுக்கு இடையேயான ஒட்டுமொத்த ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், தலைமையிட அணி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. தெற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் அடுத் இரண்டு இடங்களை பிடித்தன. மேலும், பெண் காவலர்களுக்கிடையேயான ஒட்டுமொத்த ரிவால்வர்-பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டிகளில் வடக்கு மண்டல அணி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

மேற்கு மண்டலம் மற்றும் சென்னை பெருநகர காவல் அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. இதேபோல், மேற்கு மண்டல அணி கார்பைன்-ஸ்டென்கன் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. சென்னை பெருநகரக் காவல் மற்றும் தாம்பரம் மாநகர காவல் அணிகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தனதாக்கின. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கினார்.

The post மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு டிஜிபி பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: