×

என்.என்.கண்டிகை அரசுப்பள்ளி கட்டிடத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்புகள் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை அரசுப்பள்ளியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 41 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில், பலவீனமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக கூறி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மூடி, மாணவர்களை அங்குள்ள குறுகிய சேவை மைய கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு 4 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வந்தது. அங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளும் இல்லாததால், குறுகிய இடத்தில் அமர்ந்து படிக்க மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பலவீனம்டைந்து இருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

அந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் புகார் செய்திருந்தனர். இதனை அடுத்து உதவி திட்ட அலுவலர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக மாணவர்கள் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளியை திறக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். பள்ளியில் குடிநீர் வசதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நேற்று பள்ளி திறந்து மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைகளில் அமர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post என்.என்.கண்டிகை அரசுப்பள்ளி கட்டிடத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வகுப்புகள் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : NN Kandigai Government School ,Tiruvalangadu Union N.N.Kandigai Government School ,Panchayat Union Primary School ,Tiruvallur District ,Tiruvalangadu Union N.N.Kandigai. ,NN Kandigai Govt School ,
× RELATED ஐஎன்எஸ் தலைவராக ஷ்ரேயம்ஸ் குமார் தேர்வு