கான்பூரில் 2வது டெஸ்ட் போட்டி; வங்கதேசம் 3 விக்கெட்டுக்கு 107: மழையால் ஆட்டம் பாதிப்பு

கான்பூர்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்துள்ளது. கிரீன் பார்க் மைதானத்தில் நேற்று காலை 9.30க்கு தொடங்க இருந்த இப்போட்டி, முதல் நாள் இரவு பெய்த கனமழையால் மைதானம் ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். 2015க்கு பிறகு சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வங்கதேச அணியில் நஹித், தஸ்கின் அகமதுவுக்கு பதிலாக காலித் அகமது, தைஜுல் இஸ்லாம் இடம் பெற்றனர்.

ஜாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்தாலும், 24 பந்துகளை எதிர்கொண்ட ஜாகிர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆகாஷ் தீப் வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். ஷத்மன் 24 ரன் எடுத்து (36 பந்து, 4 பவுண்டரி) ஆகாஷ் வேகத்தில் எல்பிடபுள்யு ஆக, வங்கதேசம் 12.1 ஓவரில் 29 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், மோமினுல் ஹக் – கேப்டன் நஜ்முல் ஷான்டோ ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. உணவு இடைவேளையின்போது வங்கதேசம் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன் எடுத்திருந்தது.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் நஜ்முல் ஷான்டோ 31 ரன் (57 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். வங்கதேசம் 35 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தடைபட்டது. அதைத் தொடர்ந்து கனமழை கொட்டத் தொடங்கியதை அடுத்து முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. மோமினுல் ஹக் 40 ரன், முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post கான்பூரில் 2வது டெஸ்ட் போட்டி; வங்கதேசம் 3 விக்கெட்டுக்கு 107: மழையால் ஆட்டம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: