குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு – சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை: ஐகோர்ட்டில் தகவல்!!

சென்னை: குத்தகை ரத்து தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப்புக்கு 160 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு கடந்த 1946 மார்ச் மாதம் ஆண்டுக்கு 614 ரூபாய் 13 அணாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில், வாடகை பாக்கி தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்தை அரசுக்கு ரேஸ் கிளப் தரவில்லை. மேலும் குத்தகை ஒப்பந்தத்தை மீறி ரேஸ் தவிர மற்ற பயன்பாடுகளுக்கு நிலத்தை கிளப் பயன்படுத்தியதால் அந்த குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து ரேஸ் கிளப் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி ரேஸ் கிளப் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. அப்போது, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, குத்தகை ரத்து செய்யப்பட்டதாக கூறி, ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்தரன் ஆஜராகி, நிலம் குத்தகை ரத்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், இந்த அவமதிப்பு வழக்கின் விசாரணையை நான்கு வாரங்கள் தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ரேஸ் கிளப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

The post குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு – சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை: ஐகோர்ட்டில் தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: