×

தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூ.5.15 கோடி விற்பனை இலக்கு

கோவை, செப். 26: கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள, மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை உதவி இயக்குநர் வெற்றிவேல், கோ-ஆப்டெக்ஸின் மண்டல மேலாளர் அம்சவேணி, முதுநிலை மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) ஜெகநாதன், மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச்சேலைகள் வாடிக்கையாளர்களின் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ற புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மருதம் கோ-ஆப்டெக்ஸ், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், வண்ணமலர் கோ-ஆப்டெக்ஸ், ஸ்ரீ பாலமுருகன் கோ- ஆப்டெக்ஸ் ஆகிய 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சுமார் ரூ.5.15 கோடி விற்பனை செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு மற்றும் பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவர் அணியும் ஆயத்த சட்டைகள், மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் என ஏராளமானவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி பயன்பெற்று நெசவாளர்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூ.5.15 கோடி விற்பனை இலக்கு appeared first on Dinakaran.

Tags : Co-Optex ,Diwali ,Coimbatore ,District Collector ,Granthi Kumar ,Marutham Co-Optex ,VUC Park, Coimbatore ,Dinakaran ,
× RELATED கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை