×

தொடர் மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்போரூர், செப்.26: கேளம்பாக்கத்தில் ஷாப்பிங் மால்கள், வர்த்தக நிறுவனங்கள், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்றவாறு மின் விநியோக கட்டமைப்பு நவீனப்படுத்தப்படவில்லை. நீண்டகால கோரிக்கைகளுக்கு பிறகே சில ஆண்டுகளுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் மின் விநியோக அலுவலகம் திறக்கப்பட்டது. இருப்பினும், போதிய மின் அழுத்தம் கிடைக்காததால் தினமும் அறிவிக்கப்படாத மின்தடை இருந்து வருகிறது. இரவிலும் மின்வெட்டு இருப்பதால் பலரும் வாட்சப் குழுக்களில் இதுகுறித்து தினமும் பதிவுகளை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கேளம்பாக்கம் அனைத்துக்கட்சிகள், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று கேளம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசி மின்வாரிய அலுவலர்கள், புகார்களை சரி பார்ப்பதற்காக மின்தடை ஏற்படும் என்றும், தேவையில்லாமல் மின் சப்ளையை துண்டிப்பது இல்லை என்றும், அவ்வாறு மின் சப்ளையை துண்டிக்காமல் எப்படி வேலை செய்ய முடியும் என்று ஒருமையில் பேசியதால் பொதுமக்களுக்கும், மின்வாரிய அலுவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், மின்வாரிய அலுவலகத்தின் உள்ளே சென்று மின்வாரிய அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த, பேச்சுவார்த்தையில் மின் அழுத்தம் குறைவாக உள்ள இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது என்றும், பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்களை அமைப்பது என்றும், மின்தடை புகார்களை உடனுக்குடன் கேட்டு சரி செய்வதற்காக புகார் எண் ஒன்றை உருவாக்கி பொதுமக்களுக்கு தெரிவிப்பதும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஓரிரு வாரங்களில் பொதுமக்களின் அனைத்து குறைகளையும் தீர்வு செய்து, தடையின்றி மின் சப்ளை செய்ய மின் வாரியம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

பைக்கில் சென்ற எம்எல்ஏ
மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு செல்ல எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முடிவு செய்தார். ஆனால், கார் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவ்வழியே சென்ற ஒருவரின் பைக்கினை வாங்கி அதில் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post தொடர் மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே நல்லாண்பிள்ளை...