×

மகா ரதம் சீரமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை, செப்.26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா ரதம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் பணிகளை முடித்து நவம்பர் முதல் வாரம் வெள்ளோட்டம் விட திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 13ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று நடைபெறும் பஞ்சரத பவனி (தேர் திருவிழா) மிகவும் பிரசித்தி பெற்றது. ஒரே நாளில் அடுத்தடுத்து 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாடவீதியில் பவனி வருவதும், அதிகாலை தொடங்கி, மறுதினம் அதிகாலை வரை தேரோட்டம் நடைபெறுவதும் வேறு எங்கும் காணக்கிடைக்காத சிறப்புக்குரியது.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை முன் கூட்டியே சீரமைத்து தயார் நிலையில் வைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றை சீரமைத்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதையொட்டி, தேர் ஸ்தபதி மற்றும் பொறியாளர் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தி, தேர்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்துள்ளனர். அதன்படி, முதலாவதாக மகா ரதம் எனப்படும் பெரிய தேர் சீரமைப்பு பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. தேரில் பழுதடைந்துள்ள விதானம், சுவாமி பீடம் உள்ளிட்ட பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டு, புதியதாக பொருத்தப்படுகிறது. அதையொட்டி, முதல்தர தேக்கு மரத்தில் தேர் சீரமைப்பு பணி நடக்கிறது. மாமல்லபுரத்தை சேர்ந்த தேர் ஸ்தபதிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில், தேர் சீரமைப்பு பணி இரவு பகலாக நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வாரத்தில் தேர் பீடத்தின் மீது விதானத்தை நிலை நிறுத்த ஸ்தபதிகள் திட்டமிட்டுள்ளனர். மகா ரதம் சீரமைப்பு பணி அடுத்த மாதம் இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். பின்னர், நவம்பர் முதல் வாரத்தில் உறுதிச்சான்று பெற்று, வெள்ளோட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர், பராசக்தி அம்மன் ேதர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றில் உள்ள சிறுசிறு பழுதுகள் சரி செய்யப்பட்டு, உறுதித்தன்மை சான்று பெற திட்டமிடப்பட்டுள்ளது.

The post மகா ரதம் சீரமைக்கும் பணி தீவிரம் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Tags :
× RELATED அதிமுக நிர்வாகி வீட்டில் 12 சவரன்...