×

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும் தகுதியற்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பதவிக்காலம் முடிவடையாத மாநிலங்களின் சட்டப்பேரவைகளை கலைக்க வேண்டியிருக்கும். இது அமலானால் சட்டப்பேரவையை கலைக்கும் உரிமை ஒன்றிய அரசிடம் சென்றுவிடும். எனவே இத் திட்டத்தை கைவிட வேண்டும்.

இந்திய அரசு, இலங்கையில் புதிதாக பொறுப்பேற்று உள்ள அனுரா குமார திசநாயக அரசுடன் பேசி, தமிழக மீனவர்களின் உரிமையை காக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு புள்ளியியல் நிலைக் குழுவை கலைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலும் தாமதமாகும் சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பட்டறையில் உருவான ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசுத் தலைவர் உடனே விடுவிக்க வேண்டும்.

வக்பு வாரிய சொத்துகளை இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலை யை மோடி அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமை வகித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், ராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும் தகுதியற்ற ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Madhyamik High Committee ,CHENNAI ,Madhyamik High Level Committee ,Egmore ,Parliament ,MDMK ,Dinakaran ,
× RELATED அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்...