×

கைத்தறி தொழில் சார்ந்த விருதுகள்; 12 விருதாளர்களுக்கு ரூ22.65 லட்சம் காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை: மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 விருதாளர்களுக்கு ரூ22.65 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த நெசவாளர் விருது: புதுமையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்தி தற்போதைய சந்தை தேவைக்கேற்ப பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் “சிறந்த நெசவாளர் விருது\” ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 5 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 3 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 2 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த வடிமைப்பாளர் விருது: ஜவுளித்துறையில் மாறிவரும் நவீன ரசனைக்கேற்ப புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதற்காக அரசால் சிறந்த வடிமைப்பாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கான முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 10 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது: ஜவுளித் தொழிலின் நுட்பங்களை பயன்படுத்தி, அவற்றை தற்கால சந்தை மற்றும் ஆடை அலங்கார நிலவரங்களுக்கேற்ப கைத்தறி துணிகளாக உற்பத்தி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான “சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது” 2022-23-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ்விருதிற்கு முதல் பரிசிற்கான பரிசுத்தொகை 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நெசவாளர் விருது பெறுவோர் விவரம்: 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகரன், இரண்டாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.குமரேசன், மூன்றாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் புகழேந்தி ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பிரேமா, இரண்டாம் பரிசினை பரமக்குடி லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் அலமேலு, மூன்றாம் பரிசினை கோயம்புத்தூர் வதம்பச்சேரி  நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் மகாலெட்சுமி ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. சிறந்த வடிவமைப்பாளர் விருது பெறுவோர் விவரம்: மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் குமரவேல், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வடிவமைப்பாளர் பார்த்திபன், மூன்றாம் பரிசினை தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கமலவேணி என 9 விருதாளர்களுக்கு 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.

சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது பெறுவோர் விவரம்: மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நவநாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு இளநிலை அறிவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி தர்ஷணா, இரண்டாம் பரிசினை மதுரையை சேர்ந்த சங்கர், சுயசார்பு வடிவமைப்பாளர் மூன்றாம் பரிசினை கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆடை அலங்கார வடிவமைப்பில் இளங்கலை தொழில்நுட்பவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி ஹரிணி என 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித்துறை இயக்குநர் சண்முக சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கைத்தறி தொழில் சார்ந்த விருதுகள்; 12 விருதாளர்களுக்கு ரூ22.65 லட்சம் காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Handloom Industry Awards ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண்...