கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்

விருதுநகர், செப்.25: சுந்தரபாண்டியத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் கைத்தறி துறையின் கீழ் 51 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்கள் மூலமாக 6 ஆயிரம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் பருத்தி ரக சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், லுங்கிகள், வேட்டிகள், அரசின் விலையில்லா சேலை, விலையில்லா காடா துணி ரகங்கள் நெசவு செய்யப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சுந்தரபாண்டியத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாம் கைத்தறி துறை உதவி இயக்குநர் வெங்கடேசலு, சுந்தரபாண்டியம் பேரூராட்சி சேர்மன் ராஜம்மாள், வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், சுந்தரபாண்டியம் பேரூராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்திரகலா, பூமாலை, காளிமுத்து, குருநமச்சிவாயம், மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

முகாமில் விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை பணியாளர்கள் மூலமாக பொது மருத்துவம், பல் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், கண் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், சித்த மருத்துவம், தோல் மருத்துவம், இசிஜி, எக்ஸ்ரே, ரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சுமார் 807 நெசவாளர்கள் பயனடைந்தனர்.

The post கைத்தறி துறையின் சார்பில் நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: