×

முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக வழக்கறிஞரிடம் ரூ32.5 லட்சம் மோசடி: பெண் உட்பட இருவர் கைது


தாம்பரம்,: நந்திவரம் – கூடுவாஞ்சேரி, ராஜிவ்காந்தி நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (41), வழக்கறிஞரான இவருக்கு, நண்பர் கார்த்திகேயன் மூலம் பள்ளிக்கரணையை சேர்ந்த பாத்திமா எழிலரசி மற்றும் அவரது கணவர் மரியா லூயிஸ் ஆகியோர் அறிமுகமாகினர். கடந்த 2022ம் ஆண்டு அருண்குமார் அலுவலகத்திற்கு வந்த இவர்கள், தங்களது நண்பர்களான சுந்தரம் மற்றும் விஜய் ஆகியோருடன் இணைந்து எப்.எக்ஸ் யோகி அட்வைசர்ஸ் அண்ட் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற டிரேடிங் நிறுவனத்தை ஆழ்வார்பேட்டையில் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மாதம்தோறும் 4 சதவீதம் வட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.

அதன்பேரில், பாத்திமா வங்கி கணக்கிற்கு அருண்குமார் ரூ5 லட்சம் அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து, கடந்த 26.4.2023 அன்று மேற்படி நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு ரூ2.5 லட்சம் அனுப்பியுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் பாத்திமாவை அருண்குமார் தொடர்புகொண்டு, நான் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடு, என கேட்டுள்ளார். அப்போது, மேலும் சில லட்சங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், என கூறியுள்ளார். அதன்பேரில், அருண்குமார் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த ரூ25 லட்சத்தை கடந்த 30.9.2023 அன்று பாத்திமாவின் கணவர் மரியா லூயிஸ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயனை ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

கடந்த 20.10.2023 அன்று மாத வட்டி தொகை வழங்காததால், பாத்திமாவை தொடர்பு கொண்டு அருண்குமார் கேட்டபோது நிறுவனத்தின் பங்குதாரர் சுந்தரம் உடல்நலம் சரியில்லாததால், நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து தான் சுந்தரத்திற்கு சிகிச்சை அளித்தோம், என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்குமார், இதுகுறித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தன்னை போலவே பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அருண்குமார், கடந்த மார்ச் மாதம், 20ம் தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பள்ளிக்கரணையை சேர்ந்த பாத்திமா எழிலரசி, அவரது கணவர் மரியா லூயிஸ் மற்றும் மந்தைவெளி பகுதியை சேர்ந்த விஜய் ஆகியோர் டிரேடிங் நிறுவனம் நடத்தி அருண்குமாரிடம் ரூ32.50 லட்சம் வரை பண மோசடி செய்ததும், இதே போல், பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பாத்திமா எழிலரசி, மரியா லூயிஸ் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

The post முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக வழக்கறிஞரிடம் ரூ32.5 லட்சம் மோசடி: பெண் உட்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக...