×

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் 3வது பெண் பிரதமராக ஹரிணி அமரசூர்ய நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக (60), நேற்று முன்தினம் நாட்டின் 9வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக புதிய அரசு ஆட்சி அமைக்கும் வகையில் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரும் பதவி விலகினார்கள். இதனை தொடர்ந்து நேற்று புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

அதிபர் அனுர குமார திச நாயக முன்னிலையில் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூர்யா நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு நீதி, கல்வி , தொழிலாளர் துறை, தொழில்துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிரதமராக பதவி வகித்த மாவோ பண்டாராநாய்க்க, அவரது மகள் சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு பிறகு பிரதமராக பொறுப்பேற்கும் மூன்றாவது பெண் ஹரிணி அமரசூர்யா.

தொடர்ந்து என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் லக்‌ஷ்மன் நிபுனாராச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.  இதனை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் இறுதியில் பொது தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

The post இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்யா பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Harini Amarasuriya ,Sri Lanka ,Colombo ,National People's Power ,NPP ,Anura Kumara Dissanayake ,
× RELATED இலங்கையின் 16ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு