×

பொன்னேரி அருகே பழவேற்காட்டில் மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு பகுதியில் மீனவ பெண்களுக்கான மத்திய அரசாங்கத்தின் எம்.எஸ்.எம்.இ. சிறு குறு தொழில் மையத்தின் சார்பாக, இறால், மீன் மற்றும் மீன் கருவாடு ஆகிய பொருட்களில் ஊறுகாய் தயாரித்தல் மற்றும் அதற்கு மதிப்பு கூட்டும் வகையில் மீன் கட்லெட் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்தில், 30 பெண்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சியினை சென்னை சமூக சேவை சங்கம் மற்றும் எம்எஸ்எம்இ நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியின் முடிவாக 30 பயனாளிகளுக்கும் சான்றிதழ்கள் நேற்று மாலை வழங்கப்பட்டது. சான்றிதழ்கள் வழங்கி இவர்கள் வாழ்வாதாரம் பெருகும் நோக்கத்தில் கடனுதவி பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் பங்குதந்தை எம்.பி.ஜேக்கப் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம்எஸ்எம்இ நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் கிரண் தேவா, மீன்வளத்துறை அன்பழகன், மாவட்ட தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக பாஸ்கர், பொன்னேரி பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் ரவி, திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொதுச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்சியினை பழவேற்காடு பகுதி பொறுப்பாளர் ஹாஜா மொய்தீன் ஒருங்கிணைத்தார்.

The post பொன்னேரி அருகே பழவேற்காட்டில் மீன் உணவு தயாரிக்க பயிற்சி பெற்ற 30 பெண்களுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Palavekkat ,Ponneri ,Government ,Palavekadu ,Meenjoor Union ,Tiruvallur District ,Small and Medium Enterprises Centre ,
× RELATED சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?