குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் பைடனுடன் பேச்சுவார்த்தை

வில்மிங்டன்: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இதன் 4வது உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலாவரில் உள்ள வில்மிங்டன் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி புறப்படும் முன்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியாருடன் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்’’ என்றார்.

இந்திய நேரப்படி நேற்றிரவு சுமார் 8 மணி அளவில் அமெரிக்காவின் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அதிபர் பைடனின் சொந்த ஊரான டெலாவரில் உள்ள ஓட்டலுக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, டெலாவரின் வில்மிங்டன் நகரில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், உக்ரைன் மற்றும் காசாவில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு அமைதி தீர்வு கண்டறிவதற்கான வழிகளை ஆராயவும் விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டை தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் இடையே இருதரப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதில் 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் தொடர்ந்த வழக்கில் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட நோட்டீஸ் குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகிறது. இதுதவிர, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் பிரதமர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து 3 நாடுகளுடன் தலைவர்களுக்கும் அதிபர் பைடன் இரவு விருந்து வழங்குகிறார். குவாட் மாநாட்டை முடித்துக் கொண்டு அடுத்த நாள் நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்திப்பதுடன், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் உரையாற்ற உள்ளார். பயணத்தின் 3வது மற்றும் கடைசி நாளில் நியூயார்க்கில் நடக்கும் ஐநா எதிர்கால உச்சி மாநாட்டில் மோடி உரையாற்ற உள்ளார்.

The post குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: அதிபர் பைடனுடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: