விலங்கு கொழுப்பு கலந்த நெய் சப்ளை செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் பரபரப்பு பின்னணி

திண்டுக்கல்: திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பிய நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த சர்ச்சையில் திண்டுக்கல் நிறுவனம் சிக்கியுள்ளது. திருப்பதி தேவஸ்தான லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்வதாக பெரும் சர்ச்ைச எழுந்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய்யில் தான் விலங்கு கொழுப்பு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல், மதுரை ரோட்டில் ஏ.ஆர். ஃடெய்ரி புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 1995ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர்களாக திண்டுக்கல் பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன், இவரது மனைவி சூரியபிரபா, மாமனார் சீனிவாசன் உள்ளனர். திண்டுக்கல் ராஜ் பால் நிறுவனம் சிறிய அளவில் துவங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தில் பால், நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா, பன்னீர், வெண்ணெய், பால்பேடா போன்றவை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினசரி அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தினந்தோறும் 3.50 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவு வைக்கப்பட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

ராஜ் பால் என்று தமிழ்நாட்டிலும், மலபார் பால் என்று கேரளாவிலும் இந்த நிறுவனத்தின் பால் விற்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் பல ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ராஜசேகரன், பல்வேறு அமைப்புகளில் பதவி வகித்து வருகிறார். திண்டுக்கல் வர்த்தக சபையில் செயற்குழு உறுப்பினர், இந்திய நீர் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர், தமிழ்நாடு பால் பண்ணைகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.

The post விலங்கு கொழுப்பு கலந்த நெய் சப்ளை செய்த திண்டுக்கல் நிறுவனத்தின் பரபரப்பு பின்னணி appeared first on Dinakaran.

Related Stories: