×

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்


நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை மேயர் மகேஷ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது ஆங்காங்கே பைக்குகள் நிறுத்தப்பட்டு இருந்ததை கண்டித்த மேயர் மகேஷ், பஸ் நிலையத்துக்குள் பைக்குகள் நிறுத்தவதை தடை செய்ய வேண்டும் என்றார். பஸ் நிலையத்தில் தாய்ப்பால் ஊட்டும் அறை இல்லாமல் இருப்பது குறித்து மேயர் மகேஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பஸ் நிலையத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான அறை எந்த வித பயன்பாடும் இல்லாமல் இருந்தது. இங்கு தாய்ப்பால் ஊட்டு அறை அமைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார்.

வடசேரி பஸ் நிலையம் சுமார் ரூ.55 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியும் கிடைத்துள்ளது. இதற்காக வடசேரி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் மாற்றப்பட உள்ளன. வியாபாரிகள் நலன் கருதி பஸ் நிலையம் அருகிலேயே கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். வடசேரி பஸ் நிலையத்தில் ஆதரவற்றோர் தங்கும் இல்லம் உள்ளது. அந்த பகுதியில் காலி இடங்கள் உள்ளது. அந்த இடத்தில், கடைகள் அமைப்பது குறித்து ஆலோசித்தார். பின்னர் அங்கிருந்து வடசேரி பஸ் நிலையத்தின் அருகில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட மேயர் சென்றார்.

அப்போது உழவர் சந்தையின் ஒரு பகுதியை வாடகைக்கோ, குத்தகைக்கோ எடுத்து கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவு செய்வது பற்றியும் ஆலோசித்தார். உழவர் சந்தை இடம் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாயிகள் நலனுக்காகவே உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உழவர் சந்தையை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் உழவர் சந்தை இடம் வியாபாரிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் சந்தித்து பேசி, அவர்கள் அனுமதி அளித்தால் இது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் உழவர் சந்தையில் இருந்து அருகில் உள்ள மீன் சந்தைக்கு மேயர் மகேஷ் சென்றார். மீன் சந்தையில் பொருட்கள், கழிவுகள் ஆங்காங்கே கிடந்தன. கழிவு நீர் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தன. மேலும் உடைந்து போன பொருட்கள், கழிவு பொருட்கள் ஆங்காங்கே கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேயர் மகேஷ், எவ்வளவு முறை சொன்னாலும் அதிகாரிகள் கேட்பதில்லை. இதை கண்காணித்து நடவடிக்கை எடுங்கள்.

உங்கள் வீட்டுக்குள் கழிவு பொருட்கள் இப்படி கிடந்தால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பிய மேயர் மகேஷ், மனசாட்சி படி வேலை செய்யுங்கள் என கண்டித்தார். கழிவு பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். வடசேரி பஸ் நிலையத்துக்கு வெளியே உள்ள கடைகளுக்கு வெளியே பொருட்கள் இருந்தன. மேற்கூரைகளும் கடைகளுக்கு வெளியே நீண்டு கொண்டு இருந்தது. இவற்றை ஒரு நாள் கெடு விதித்து அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேயருடன் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் கலைவாணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மீன் சந்தைக்கு வெளியே பைக்குகள் ஆட்டோக்கள் நிறுத்த தடை
வடசேரி மீன் சந்தைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சந்தைக்கு வெளியே வாகனங்களை நிறுத்துகிறார்கள். இவ்வாறு நிறுத்தும் வாகனங்களை டிராபிக் போலீஸ் மூலம் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் கூறினார். சந்தைக்கு வருபவர்களின் வசதிக்காக வாகன பார்க்கிங் உள்ளது. அவர்கள் அங்கு தான் பைக்குகளை நிறுத்த வேண்டும் என்றார். வாகன நிறுத்தங்களில் கடைகள், பொருட்கள் இருந்தன. அதை அகற்ற உடனடியாக மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

The post விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம் appeared first on Dinakaran.

Tags : Vadasery bus station ,Nagercoil ,Mayor ,Mahesh ,Vadassery bus station ,Vadaseri ,station ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தின விழா மேயர் மகேஷ் பங்கேற்பு