×

வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகளால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் கல்குவாரி மற்றும் மலைமண் குவாரிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள குவாரிகளில் இருந்து லாரிகள் மூலம் ஜல்லி கற்கள், எம்சாண்ட், சவுட்டு மண், மலை மண் உள்ளிட்டவை எடுக்கப்படுகின்றன.

அவற்றை பெரும்புதூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் செயல்படும் கட்டுமான பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர்.  இந்நிலையில், மண் எடுத்துச் செல்லும் கனரக லாரிகளில் அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து வரும் அதிக சத்தத்தால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து செல்கின்றனர். மேலும், ஒருசில வாகன ஓட்டிகள் கீழேவிழும் சூழலும் ஏற்படுகிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜாபாத் சாலை, காஞ்சிபுரம் சாலை, பெரும்புதூர் சாலை, செங்கல்பட்டு சாலை ஆகிய சாலைகளில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை கனரக லாரிகள் சென்று வருகின்றன. இதில், பெரும்பாலான லாரிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் லாரி ஓட்டுநர்கள் ஹாரன் அடிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில நேரங்களில் முதியவர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது உடல் உபாதை ஏற்பட்டு மயக்கமடைகின்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இப்பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வாலாஜாபாத் பகுதிகளில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் குவாரி லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Wallajahabad Municipality ,Wallajabad ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் இருந்து...