×

திடீரென திறந்த கார் கதவு மீது பைக் மோதி வாலிபர் பலி: 2 டிரைவர்கள் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே சாலையோரத்தில் நின்ற கார் கதவை திடீரென திறந்தபோது அதில் மோதி பைக்கில் வந்த வாலிபர் எதிர் திசையில் வந்த லாரி ஏறி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக கார் டிரைவர் மற்றும் லாரி டிரைவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(38). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவர், நேற்றுமுன்தினம் திருவேற்காட்டில் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவேற்காடு – வேலப்பன்சாவடி சாலை பெருமாளகரம் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரின் கதவை திடீரென ஒருவர் திறந்துள்ளார். இதனால் பைக் கார் கதவு மீது மோதியதில் பைக்குடன் சரவணன் கீழே விழுந்தார்.

அப்போது எதிர் திசையில் வந்த லாரி சரவணன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவர் ராமமூர்த்தி(58) மற்றும் லாரி டிரைவர் மாரிமுத்து(35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திடீரென திறந்த கார் கதவு மீது பைக் மோதி வாலிபர் பலி: 2 டிரைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Maduravayal ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு...