×

12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி

பெய்ரூட்: லெபனான் நாட்டில் பேஜர்கள் வெடித்துச் சிதறி 12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில், அடுத்த நாளான நேற்று வாக்கி டாக்கிகள் வெடித்து 9 பேர் பலியான சம்பவம் பீதியை கிளப்பி உள்ளது. காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எல்லையில், இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே துப்பாக்கி சண்டை, ராக்கெட் வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல் பலமுறை எச்சரிக்கை விடுத்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், லெபனான் நாட்டில் நேற்று முன்தினம் திடீரென பேஜர்கள் வெடித்துச் சிதறின. இஸ்ரேலின் ரேடியோ அலைவீச்சு கண்காணிப்பில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். சமீபத்தில் அந்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஹங்கேரி மற்றும் தைவான் நாட்டு நிறுவனங்களின் பேஜர்களில் இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் சிறிய அளவில் வெடிபொருளை ரகசியமாக வைத்து அனுப்பி உள்ளது. இவற்றை ஒரே நேரத்தில் இஸ்ரேல் நேற்று முன்தினம் வெடிக்க வைத்ததாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டி உள்ளது.

பேஜர்கள் வெடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் பலியாகினர். 3,000 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் பலியானவர்களின் இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. அப்போது தலைநகர் பெய்ரூட் உட்பட பல இடங்களில் வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் கொண்டு வந்த வாக்கி டாக்கிகள் வெடித்துள்ளன. இதில் 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஒரு குழந்தையும் இறந்ததாக கூறப்படுகிறது. 300 பேர் காயமடைந்தனர். வீடுகளில் இருந்த சோலார் பேனல்கள் உள்பட சில எலக்ட்ரானிக் சாதனங்களும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தின் பின்னணியிலும் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டி உள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையேயான மோதல் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.

The post 12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Lebanon ,pager ,Beirut ,Gaza… ,pager bomb blast ,Dinakaran ,
× RELATED லெபனானில் நடைபெற்ற பேஜர்...